இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரும் அதனைத் தொடர்ந்து இலங்கை,
சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரும் சிம்பாப்வே மண்ணில் நடைபெற உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை நேற்று உத்தியோகபூர்வாமாக தெரிவித்துள்ளது.
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளும் ஹராரேயில் நடைபெற உள்ளதோடு 1ஆவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த தொடரை தொடர்ந்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும் சிம்பாப்வே அணி இலங்கை அணியை ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் சந்திக்கிறது.
மொத்தமாக 7 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் ரவுண்ட் – ரொபின் போட்டிகளில் மூன்று அணிகளும் இரண்டு முறை ஒருவருக்கொருவர் விளையாட வேண்டும். அதன் பின் இறுதிப் போட்டி 27ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கடைசி 4 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும் என சிம்பாப்வே கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்கவில்லையெனத் தெரிவித்து, சிம்பாப்வே அணிக்காக விளையாடும் ஹராரேயைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு மறுப்புத் தெரிவித்து, எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடக்கம் சிம்பாப்வே வீரர்களுக்கான போட்டி ஊதியங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இவ்வாண்டு ஜூலையுடன், வீரர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகியுள்ளதாகவும், புதிய ஒப்பந்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டு இருந்தது. இது இவ்வாறு இருந்த நிலையில் சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவர் வில்பிரட் முகொன்டிவா இந்த ஊதியங்கள் தரப்படும் என உத்தரவாதம் அளித்த நிலையில் தான் இந்த தொடருக்கான உத்தியோகபூர்வாமான திகதிகள் வெளியிடப்பட்டன.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இறுதியாக 2004ஆம் ஆண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தோடு இந்த 2 அணிகளும் மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை ஒன்று சந்தித்துள்ளன. இதில் 10 போட்டிகளை இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு போட்டிகள் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.
காலநேர அட்டவணை
இலங்கை எதிர் சிம்பாப்வே டெஸ்ட் தொடர்
1ஆவது டெஸ்ட் போட்டி : ஒக் 29 – நவ 02 (ஹராரே விளையாட்டுக் கழக மைதானம்)
2ஆவது டெஸ்ட் போட்டி : நவ 06 – நவ 10 (ஹராரே விளையாட்டுக் கழக மைதானம்)
இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1ஆவது போட்டி : நவம்பர் 14 இலங்கை எதிர் சிம்பாப்வே (ஹராரே விளையாட்டுக் கழக மைதானம்)
2ஆவது போட்டி : நவம்பர் 16 இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள் (ஹராரே விளையாட்டுக் கழக மைதானம்)
3ஆவது போட்டி : நவம்பர் 19 சிம்பாப்வே எதிர் மேற்கிந்திய தீவுகள் (புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம்)
4ஆவது போட்டி : நவம்பர் 21 இலங்கை எதிர் சிம்பாப்வே (புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம்)
5ஆவது போட்டி : நவம்பர் 23 இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள் (புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம்)
6ஆவது போட்டி : நவம்பர் 25 சிம்பாப்வே எதிர் மேற்கிந்திய தீவுகள் (புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம்)
இறுதிப் போட்டி : நவம்பர் 27 முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் (புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம்)