ஜிம்பாப்வேயில் நடைபெறுகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே இலங்கை அணி தெரிவு செய்யப்பட்ட நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் டக்வத்-லுவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 49 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களால் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஜிம்பாப்வே அணி தனது முதல் 7 விக்கெட்டுகளையும் 89 ஓட்டங்களுக்கு இழந்து சொற்ப ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துவிடும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
எனினும் ஜிம்பாப்வே அணி 127 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் சிகந்தர் ராசாவுடன் ஒன்பதாவது விக்கெட்டுக்காக இணைந்த டென்டாய் சிசொரோ இருவரும் இணைந்து 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றதோடு, அதிரடியாக துடுப்பாடி ஜிம்பாப்வே அணியின் ஓட்ட எண்ணிகையை 218 ஓட்டங்களுக்கு உயர்த்தினர். மேலும் இந்த இணைப்பாட்டம் ஜிம்பாப்வே அணியின் ஒன்பதாவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாக இன்று பதிவாகியது.
ஜிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிகந்தர் ராசா ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களையும் டென்டாய் சிசொரோ 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஆஷ்லி நர்ஸ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அவரோடு தேவேந்திர பிஷோ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 219 ஓட்டங்களை வெற்றி இலக்காக்க் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்க்காத வகையில் ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரிமர் ஆட்ட தந்திரோபாயமாக ஆரம்பம் முதலே சுழல் பந்து வீச்சாளர்களை உபயோகப்படுத்தினார். சுழல் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்த ஆடுகளத்தில் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது மேற்கிந்திய தீவுகள் அணி 27.3 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் காணப்பட்டது. ஜோனதன் கார்ட்டர் 43 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக டக்வத்-லுவிஸ் முறைப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 27.3 ஓவர்களில் 130 ஓட்டங்களைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், 124 ஓட்டங்களே எடுத்திருந்தமையால் ஜிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆட்ட நாயகனாக ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று, பந்து வீச்சில் முதலிரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஜிம்பாப்வே அணியின் டென்டாய் சிசொரோ தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
ஜிம்பாப்வே அணி – 218/8 (49) – சிகந்தர் ராசா 76*(103), டென்டாய் சிசொரோ 42*(35), ஹாமில்டன் மசகட்ஸ்சா 20(31), ப்ரைன் சாரி 19(45), டொனால்ட் திரிபனோ 15(33), ஆஷ்லி நர்ஸ் 27/3(10), தேவேந்திர பிஷோ 30/3(10), ஜேசன் ஹோல்டர் 58/2(10)
மேற்கிந்திய தீவுகள் அணி – 124/5(27.3) – ஜொனதன் கார்ட்டர் 43*(56), ஜேசன் ஹோல்டர் 22*(17), கிரேக் பரத்வைட் 24(45), ஷாய் ஹோப் 14(22), டென்டாய் சிசொரோ 23/2(6), சோன் வில்லியம்ஸ் 18/2(7)
புள்ளி விபர அட்டவணை
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவற்ற போட்டி | புள்ளிகள் | ஓட்ட விகிதம் |
இலங்கை | 4 | 2 | 1 | 0 | 1 | 11 | +0.488 |
ஜிம்பாப்வே | 4 | 1 | 1 | 1 | 1 | 8 | -1.020 |
மேற்கிந்தியத் தீவுகள் | 4 | 1 | 2 | 1 | 0 | 7 | +0.315 |
முக்கோண சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.