ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் சப்பாத்து வாங்கித் தாருங்கள் என கோரிக்கையை விடுத்திருந்தார்.
அத்துடன், அவரால் வெளியிடப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதுடன், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் வலம் வருகிறது. அத்தகைய இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் ஒரு வீரர் தோன்றினாலே அவருக்கான அனுசரணை முதல் விளம்பரப் படங்கள் வரை வரிசையில் காத்துக்கொண்டிருக்கும்.
2021 ஆசிய கிண்ண தொடர் 2023 வரை ஒத்திவைப்பு
ஆனால், இது இந்தியாவைப் பிரத்திநிதித்துவப்படுத்தி விளையாடுகின்ற வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) அந்தஸ்து அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.
மேலும், இந்திய வீரர்கள் அணியும் ஜேர்சியில் தங்கள் நிறுவனத்தின் பெயர் இடம் பெற வேண்டும் என பல்வேறு நிறுவனங்கள் முந்தியடித்து கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கிரிக்கெட் சபைகள் பிசிசிஐ–க்கு நிகராக இல்லை என்றாலும், ஓரளவிற்கு அந்தஸ்து உள்ள அமைப்புக்களாக தென்படுகின்றன.
ஆனால் கென்யா, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் கிரிக்கெட் சபைகள் மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இதுதவிர, இந்த நாடுகளின் சார்பாக விளையாடுகின்ற வீரர்களுக்கு சர்வதேச அளவில் பெரியதாக சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் சரியான அனுசரணையாளர்கள் கிடைப்பதில் கேள்வியே எழுகின்றது. இதன்காரணமாக, தமக்கான விளையாட்டு உபகரணங்களை வீரர்களே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரியான் பர்ல் கடந்த சில தினங்களுக்கு முன் தனது டுவிட்டர் பதிவில், தனது கிழிந்த சப்பாத்து மற்றும் அதனை ஒட்டுவதற்கான பசை, சரி செய்வதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றை புகைப்படமாக பதிவு செய்திருந்தார்.
Any chance we can get a sponsor so we don’t have to glue our shoes back after every series 😢 @newbalance @NewBalance_SA @NBCricket @ICAssociation pic.twitter.com/HH1hxzPC0m
— Ryan Burl (@ryanburl3) May 22, 2021
ஜிம்பாப்வே கிரிக்கெட் இன்றைய நிலைமையின் மோசமான முகத்தை காட்டும் விதமாக அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ஒவ்வோரு தொடருக்கு பிறகும் சப்பாத்தை பசையால் ஓட்ட முடியவில்லை. எங்களுக்கு அனுசரணை வழங்க ஏதாவது ஒரு நிறுவனம் முன்வருமா? அவ்வாறு முன்வந்தால் சப்பாத்தை பசையைக் கொண்டு ஓட்ட வேண்டிய சிரமம் இருக்காது‘ என குறிப்பிட்டிருந்தார்.
ரியான் பர்லின் உருக்கமான இந்தப் பதிவை கவனித்த டுவிட்டர் ரசிகர்கள், சப்பாத்து வாங்கி தருவதாகவும், அதன் அளவை அனுப்புங்கள் என்றும் பதிவிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
இவர்களின் வரிசையில் உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான ‘பூமா‘ (PUMA) ‘பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்‘ என்று பர்லின் டுவிட்டிற்கு பதில் கொடுத்தது.
Time to put the glue away, I got you covered @ryanburl3 💁🏽 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021
இதனையடுத்து, உலகெங்கிலும் உள்ள டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அடுத்த டுவிட்டில் நன்றி தெரிவித்த ரியான் பர்ல் ‘நான் பூமா நிறுவனத்துடன் இணைகிறேன் என்பதை பெருமையாக அறிவிக்கிறேன். இதற்கு காரணம் ரசிகர்களான நீங்கள் தான். எனக்கு கடந்த 24 மணிநேரத்தில் அளித்த ஆதரவு தான். உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்‘ என்று பதிவிட்டுள்ளார்.
எனவே, ரியான் பர்லின் உருக்கமான பதிவுக்கு பூமா நிறுவனம் உடனே பதிலளித்தது மாத்திரமல்லாது, ரியான் பர்ல் உள்ளிட்ட ஜிம்பாப்வே அணி வீரர்களுக்குத் தேவையான சப்பாத்துக்களை தயார்படுத்தி அவற்றை கப்பலில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு மீண்டும் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டது.
Express shipment for @ryanburl3 and his mates. I hope the colours match the jersey. 😉 pic.twitter.com/Df8jxVQ8B3
— PUMA Cricket (@pumacricket) May 24, 2021
அதில் ‘ரியான் பர்ல் மற்றும் அவர்களது நண்பர்களுக்கான சப்பாத்துக்கள் எக்ஸ்பிரஸ் கப்பலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. உங்களது ஜேர்சியின் நிறத்துடன் இந்த சப்பாத்து பொருந்தும் என நம்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் விளையாடினாலும்கூட, சப்பாத்து வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் நிலைமை இருக்கிறது என்பதுதான் ரசிகர்களை பொறுத்தவரை மனவேதனைக்குரிய விடையமாகும்.
இருப்பினும், ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு உடனடியாக உதவுவதற்கு முன்வந்த பூமா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மாத்திரமல்லாது, விளையாட்டை நேசிக்கும் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<