கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர் சங்கத்தினால் 12 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட “ஸாஹிரா சூப்பர் 16″ கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி காலை 8.30 முதல் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் என்பவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட இத்தொடரில், இலங்கையின் முன்னணி பாடசாலைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 16 அணிகள் பங்குபற்றவுள்ளன. கால்பந்தாட்டத்தின் ஊடாக மாணவர்களின் ஒழுக்க நடத்தைகளை மேம்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த சுற்றுப்போட்டியின் கருப்பொருள் “களத்தின் வெளியே விளையாட்டை செம்மையாக்குவோம்” என்பதாகும்.
சுற்றுப்போட்டியானது ‘லீக்‘ முறையில் நடாத்தப்படுவதோடு, இதில் பங்குபற்றும் அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்படவுள்ளன. குழுக்களின் தரவரிசையை பொறுத்து இரண்டாம் சுற்றுக்கான பிரிவுகள் நிர்ணயிக்கப்படும். இரண்டாவது சுற்றானது கோப்பை (Cup), தட்டு (Plate), கிண்ணம் (Bowl) மற்றும் கேடயம் (Shield) என நான்கு பிரிவுகளில் நடாத்தப்படும்.
‘கோப்பை‘ பிரிவில் வெற்றியை சுவீகரிக்கும் அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. சுற்றுப்போட்டியில் மொத்தமாக 650,000 ரூபா பெறுமதியான பணப்பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பணப்பரிசுகள் வழங்கப்படும் ஒரே சுற்றுப்போட்டி இதுவாகும்.
முதல் சுற்றின் குழுக்கள் பின்வருமாறு;
Group A | Group B | Group C | Group D |
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி | புனித பீட்டர்ஸ் கல்லூரி | ஸாஹிரா கல்லூரி கொழும்பு | றோயல் கல்லூரி |
புனித பெனடிக்ட் கல்லூரி | புனித மேரிஸ் கல்லூரி | டி மெசினட் கல்லூரி | நாலந்த கல்லூரி |
புனித ஜோசப் கல்லூரி | மானிப்பாய் இந்துக் கல்லூரி | திரித்துவக் கல்லூரி | பதுளை அல்-அதான் கல்லூரி |
ஸாஹிரா கல்லூரி கம்பளை | வெஸ்லி கல்லூரி | கொழும்பு இந்துக் கல்லூரி | இசிபதன கல்லூரி |