பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்குப்பட்ட அகில இலங்கை மட்டத்திலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு புனித மரியார் கல்லூரியை 5-௦ என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி இவ்வருடத்திற்கான சம்பியனாகத் தெரிவாகியுள்ளது. அதேவேளை, பெண்கள் பிரிவில் மலியதேவ மகளிர் கல்லூரி சம்பியனாகியது.
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் இத்தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகள் வேன்னப்புவ அல்பேர்ட் F. பிரீஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
17 வயதுக்குப்பட்ட ஆடவர் பிரிவுப் போட்டிகள்
பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் தேசிய மட்டத்தில் சம்பியன் பட்டம் வென்ற டி மெசனொட் மற்றும் ஹமீத் அல் ஹுஸைனி போன்ற பிரசித்திபெற்ற கல்லூரி அணிகள் இம்முறை தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்த தவறின. இதனால், 2016ஆம் ஆண்டுக்கான 17 வயதுக்குப்பட்ட அகில இலங்கை சம்பியன் கிண்ணத்தை கொழும்பு ஸாஹிரா கல்லூரி சுவீகரித்துக்கொண்டது.
ஸாஹிரா மற்றும் நீர்கொழும்பு மரியார் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆட்டம் ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே மரியார் கல்லூரியின் பின்கள வீரர்களைத் தாண்டி கோலுக்கருகே ஊடுருவிய மொஹம்மத் ராஷித், போட்டியின் நான்காவது நிமிடத்தில் ஸாஹிரா அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
மீண்டும் மொஹம்மத் ராஷித், ஒன்பதாவது நிமிடத்தில் வலது பக்க கோல் கம்பத்தின் பக்கத்தினால் பந்தை கம்பங்களுக்குள் உதைந்து அணிக்கான மற்றும் தனக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.
அந்த கோலைப் பெற்று இரண்டு நிமிடங்களில் கோணர் உதை மூலம் கோல் கம்பத்தின் உள்பகுதிக்கு வந்த பந்தை மரியார் அணியின் கோல்காப்பாளர் தடுத்தார். கோல் காப்பாளரின் கைகளில் பட்டு பந்து கீழே விழுந்தவுடன், ஸாஹிரா அணி வீரர் முஹம்மத் அக்தார் அதனை கோலுக்குள் உதைந்து தனது அணிக்கான கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.
கால்பந்து விளையாட்டு போட்டிகளில் இலங்கையிலேயே பிரசித்தி பெற்ற ஸாஹிரா கல்லூரி, தொடர்ந்தும் 12வது மற்றும் 17வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை முறையே ஆகிப் மற்றும் சாஜித் ஆகியோர் மூலம் அடித்து, முதல் பாதியிலேயே எட்டவே முடியாத 5–0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 05 – 00 புனித மரியார் கல்லூரி
எனினும் போட்டியின் இரண்டாவது பாதியில் மரியார் கல்லூரி அணியினர் தமது அணிக்கான முதலாவது கோலைப் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் போட்டி நிறைவடையும்வரை அவர்களால் எந்த ஒரு கோலையேனும் பெற முடியாமல் போனது. அதேபோன்றே, முதல் பாதியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஸாஹிரா கல்லூரியினாலும் இரண்டாவது பாதியில் கோல்களைப் பெற முடியாமல் போனது.
முழு நேரம் : ஸாஹிரா கல்லூரி 5 – 0 புனித மரியார் கல்லூரி
ThePapare.comஇன் ஆட்ட நாயகன் – மொஹம்மத் ராஷித் (ஸாஹிரா கல்லூரி)
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் ஆட்ட நாயகன் – முஹம்மத் ஆகிப் (ஸாஹிரா கல்லூரி)
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் சிறந்த கோல்காப்பாளர் –முஹம்மத் அலி (ஸாஹிரா கல்லூரி)
கோல் பெற்றவர்கள்
ஸாஹிரா கல்லூரி – மொஹம்மத் ராஷித் (4’, 9’), முஹம்மத் அக்தார் (11’), முகமது ஆகிப் (12’), முகமது சாஜித் (17’)
முன்னதாக, ஸாஹிரா கல்லூரி வலிமைமிக்க யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியுடனான தீர்க்கமான அரையிறுதிப் போட்டியில் விளையாடியது. அப்போட்டியில் முஹம்மத் சாஜித்தினால் போடப்பட்ட ஒரே ஒரு கோலே ஸாஹிரா அணியின் வெற்றி கோலாகவும், போட்டியில் பெறப்பட்ட கோலாகவும் அமைந்தது.
காலிறுதிப் போட்டியில் களுத்தறை ஹோலி க்ரோஸ் கல்லூரியை 1 – 0 என்ற கோல் கணக்கிலும் அதற்கு முன்னரான போட்டிகளில் பிலியந்தலை ஹெர்மன் மெய்நர் கல்லூரி மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரி ஆகிய அணிகளையும் 1 – 0 என்ற கோல் கணக்கில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி வெற்றி கொண்டிருந்தது.
போட்டிகளின் பின்னர் ஸாஹிரா கல்லூரி அணியின் பயிற்சியாளர் மொஹமட் ரூமி ThePapare.com இற்கு பிரத்யேகமாக கருத்து தெரிவிக்கையில், ”நாம் ஒரு கால்பந்து அணியாக எதிரணியோடு விளையாடும்போது, பந்தை அதிகளவில் எங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எதிர்பார்க்கிறோம். இறுதிப் போட்டி எதிர்பார்த்த அளவில் கடினமாக இல்லாவிட்டாலும், அணிக்கு அணி அவர்களின் பலம் பலவீனம் என்பவற்றை ஆய்வு செய்கிறோம். நாம் மிகவும் கடினப்பட்டோம். அதற்கான பலனை வெற்றியின்மூலம் பெற்றோம்” என்று தெரிவித்தார்.
அதிஷ்டம் மிக்க புனித மரியார் கல்லூரி அணி, ஒருசில அணிகள் வருகை தராமையால் கிடைக்க பெற்ற புள்ளிகளுடனும், அதே நேரம் தீர்க்கமான போட்டிகளில் பெனால்டி வாய்ப்பின் மூலமும் வெற்றிகளை குவித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலாவது சுற்றில் கட்டுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரியுடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில், பின்னர் புனித செபஸ்தியன் கல்லூரி அணியும் அதன் பயிற்சியாளரும் நடுவரின் தீர்மானத்துக்கு எதிராக முறையிட்டனர். இதனால், மீண்டும் பெனால்டி உதை வழங்கப்பட்டது. அதுவும் சரிவராத நிலையில் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட போட்டியில் ஏற்பட்ட சிறு சண்டையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன், புனித மரியார் கல்லூரி அணி எதிர்பார்க்காத வகையில் புனித பேதுரு கல்லூரி அணியை 2 – 0 என்ற கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டியில் வெற்றிகொண்டது. மேலும், கிண்ணியா அல் அக்சா கல்லூரி மற்றும் திஹாரி அல் அஸ்ஹர் கல்லூரி அணிகளுடனான போட்டிகளிலும் பெனால்டி முறையில் இவ்வணி வெற்றி பெற்றது.
நடைபெற்ற போட்டி முடிவுகள்
முதல் சுற்றுப்போட்டிகள்
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்- சீவலி மகா வித்தியாலயம், இரத்தினபுரி (புனித பத்திரிசியார் கல்லூரிக்கு வோக் ஓவர் முறையில் வெற்றி)
புனித மரியார் கல்லூரி, கேகாலை 0 – 1 புனித சேவியர் கல்லூரி, மன்னார்
புனித செபஸ்டியன் கல்லூரி, நீர்கொழும்பு 7 – 0 மாடகம தேசிய கல்லூரி, பிபிலை
புனித தோமஸ் கல்லூரி, பண்டாரவளை 1 – 0 தர்மசோக்க கல்லூரி
ஹோலி க்ரொஸ் கல்லூரி, களுத்தறை 3 – 0 பாப்டிஸ்ட் விஷன் தமிழ் வித்., கெகிராவ
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு 5 – 0 ஹெர்மன் ஜி மைனர், பிலியந்தலை
மதீனா தேசிய கல்லூரி, சியம்பலாகஸ்கொட்டுவ 1 – 0 புனித தோமஸ் கல்லூரி, மாத்தறை
டி மெசனொட் கல்லூரி, கந்தானை 0 (1) – 0 (4) ஸாஹிரா கல்லூரி, புத்தளம்
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி, கொழும்பு 0 (2) – 0 (3) புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
கொட்டவட்டை AMTS, வல்வெட்டித்துறை 0 (2) – 0 (5) அல் அஸ்ஹர் கல்லூரி, திஹாரி
புனித மரியார் கல்லூரி, நீர்கொழும்பு – புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுநேரிய (போட்டி இடைநிறுத்தப்பட்டு புனித மரியார் கல்லூரிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது)
பதுரிய மத்திய கல்லூரி, மாவனல்லை 3 – 0 ஓல் சைன்ட் கல்லூரி, காலி
இரண்டாம் சுற்றுப்போட்டிகள்
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் 0 (3) – 0 (2) புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ
புனித செபஸ்டியன் கல்லூரி, நீர்கொழும்பு 0 (3) – 0 (1) புனித சேவியர் கல்லூரி, மன்னார்
புனித தோமஸ் கல்லூரி, பண்டாரவளை 0 – 6 ஹோலி க்ரொஸ் கல்லூரி, களுத்தறை
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு 4 – 1 ஸாஹிரா கல்லூரி, கம்பளை
புலவர்மணி ஷரிப்டீன் வித்தியாலயம், கல்முனை 0 (3) – 0 (2) மதீனா தேசிய கல்லூரி, சியம்பலாகஸ்கொட்டுவ
ஸாஹிரா கல்லூரி, புத்தளம் 4 (1) – 4 (2) புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
அல் அஸ்ஹர் கல்லூரி, திஹாரிய 0 (4) – 0 (5) புனித மரியார் கல்லூரி, நீர்கொழும்பு
அல் அக்சா கல்லூரி, கிண்ணியா 2 – 0 பதுரிய மத்திய கல்லூரி, மாவனல்லை
காலிறுதிப் போட்டிகள்
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் 1 – 0 புனித செபஸ்டியன் கல்லூரி, நீர்கொழும்பு
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு 1 – 0 ஹோலி க்ரொஸ் கல்லூரி, களுத்தறை
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு 4 – 0 புலவர்மணி ஸரிப்டீன் வித்தியாலயம், கல்முனை
அல் அக்சா கல்லூரி, கிண்ணியா 0 (3) – 0 (4) புனித மரியார் கல்லூரி, நீர்கொழும்பு
அரை இறுதிப் போட்டி
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் 0 – 1 ஸாஹிரா கல்லூரி, கொழும்பு
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு 0 – 2 புனித மரியார் கல்லூரி, நீர்கொழும்பு
3ஆவது இடத்திற்கான போட்டி
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் 5 – 0 புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
இறுதி போட்டி முடிவுகள்
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு 5 – 0 புனித மரியார் கல்லூரி, நீர்கொழும்பு
பெண்ள் பிரிவு போட்டி
குருநாகல்,மலியதேவ மகளிர் கல்லூரி மீண்டுமொருமுறை தாம்தான் வலிமை மிக்க அணி என நரூபிக்கும் வகையில் 17 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் மலியதேவ மகளிர் கல்லூரி அணி, அனைத்து போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவான கனேமுல்ல ஜெயகொடி மகா வித்தியாலயத்துடன் மோதியது. இப்போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் மலியதேவ மகளிர் அணி வெற்றியீட்டியது.
இறுதிப்போட்டியின் ஆரம்பத்தில் கனேமுல்ல, ஜெயகொடி மகா வித்தியாலய அணியின் முன்னணி வீராங்கனை சந்துணி தத்சாரணி கோல் அடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை கோல் காப்பாளரிடம் நேரடியாக அடித்து வீணடித்தார்.
பின்னர் மலியதேவ அணியினருக்குக் கிடைத்த இலவச உதையின்போது காயத்ரி நாணயக்கர பந்தை கோல் பக்கம் உள் செல்லுத்த சுறுசுறுப்பாக இயங்கிய அசினி சசிகலா அதனை தலையால் முட்டி ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதன் பின் பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் காயத்ரி நாணயக்கார தனக்கு கிடைத்த ப்ரீ கிக் மூலம் கோல் காப்பாளருக்கு மேலாக செல்லும் வகையில் பந்தை அடித்து தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
எனினும் இறுதிவரை போராடிய ஜெயகொடி மகா வித்தியாலய அணியினர் கோல் அடிக்கும் நோக்கில் முன்னேறி வந்த பொழுதிலும் மலியதேவ வீராங்கனைகள் அந்த வாய்ப்புகளை தடுத்தனர்.
எனவே, போட்டி முடிவின்போது, மலியதேவ பெண்கள் கல்லூரி 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஜயக்கொடி மஹா வித்தியாலயத்தை தோற்கடித்தது.
ThePapare.comஇன் சிறந்த விராங்கனை – காயத்ரி நாணயக்கார (மலியதேவ பெண்கள் கல்லூரி)
SLSFA இன் சிறந்த விளையாட்டு வீராங்கனை – காயத்ரி நாணயக்கார (மலியதேவ பெண்கள் கல்லூரி)
SLSFA இன் சிறந்த கோல்காப்பாளர் – கவிந்தா நெத்மினி (ஜயக்கொடி மஹா வித்தியாலயம்.)
கோல் பெற்றுக்கொடுத்தவர்கள்
மலியதேவ மகளிர் கல்லூரி – அசினி சசிகலா 9′, காயத்ரி நாணயக்கார 19 ‘
மலியதேவ மகளிர் அணி, குருனாகல் அர்ச் ரியால்ஸ் கவிசிகமுவ மஹா வித்தியாலயத்தை அரை இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அதேநேரம், காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரியையும் வென்றி கொண்டது.
ThePapare.com இற்கு பிரத்யேகமாக கருத்து தெரிவித்த மலியதேவ மகளிர் கல்லூரி அணியின் பயிற்சியாளர், ”எங்களுடைய எதிராணி மிகவும் திறமையாக இறுதிப்போட்டியில் விளையாடியது. எங்கள் வெற்றி குறித்து நாம் மிகவும் சந்தோசப்படுகிறோம்” என தெரிவித்தார்.