இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன் அபேகோன்

Florence Sprint Festival 2024

199
Florence Sprint Festival 2024

இத்தாலியில் நடைபெற்ற Florence Sprint Festival 2024இல் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் 150 மீற்றர் தூரத்தை 15.19 செக்கன்களில் ஓடி முடித்த யுபுன் அபேகோன், 2024 மெய்வல்லுனர் பருவகாலத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.

150 மீற்றர் ஓட்டத்தில் யுபுனின் 2ஆவது அதிசிறந்த காலப் பெறுமதியாக இது பதிவாகியது. முன்னதாக அவர் 150 மீற்றர் ஓட்டத்தை 15.16 செக்கன்களில் நிறைவு செய்து ஆசிய மற்றும் இலங்கை சாதனையையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ஓட்டத்தில் தெற்காசியாவின் அதிவேக வீரராக வலம் வருகின்ற யுபுன், இறுதியாக கடந்த ஆண்டு பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா 100 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

எனினும், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லனர் சம்பியன்ஷிப், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த ஆண்டில் அவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலேயே பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், அவர் குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பின்னர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெற்றியீட்டி இருப்பது முக்கிய அம்சமாகும்.

இதனிடையே, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் நோக்கில் எதிர்வரும் மே 3ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள துபாய் இன்டர்நேஷனல் கிராண்ட் பிக்ஸ் போட்டித் தொடரில் யுபுன் அபேகோன் களமிறங்கவுள்ளதுடன், இந்தப் போட்டித் தொடரில் உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 60 மீற்றர் (6.59 செக்.), ஆண்களுக்கான 100 மீற்றர் (10.15 செக்.), ஆண்களுக்கான 200 மீற்றர் (20.37 செக்.) மற்றும் ஆண்களுக்கான 150 மீற்றர் (15.16 செக்) ஓட்டப் போட்டிகளில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக யுபுன் அபேகோன் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<