இலங்கையின் நட்சத்திர் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள புளோரன்ஸ் டயமண்ட் லீக்கில் (Florence Diamond League 2023) ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
மெய்வல்லுனர் விளையாட்டில் உலகின் முன்னணி போட்டித் தொடராகவும், பலரது கவனத்தை ஈர்த்துள்ள போட்டித் தொடராகவும் டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடர் விளங்குகின்றது. அந்தவகையில், இலங்கை வீரர் யுபுன் அபேகோன் பங்குபற்றவுள்ள புளோரன்ஸ் டயமண்ட் லீக்கில் உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்கள் பலர் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு உலக சம்பியனான அமெரிக்காவின் பிரெட் கெர்லி, ஒலிம்பிக் சம்பியனான இத்தாலியின் லமொன்ட் மார்செல் ஜகப்ஸ் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா சம்பியனான கென்யாவின் பெர்டினண்ட் ஒமன்யாலா ஆகிய முன்னணி வீரர்களுடன் யுபுன் அபேகோன் போட்டியிடவுள்ளார்.
இது தவிர, முன்னாள் உலக சம்பியன் ஜமைக்காவின் யொஹான் பிளேக், முன்னாள் உள்ளக சம்பியன் ட்ரைவோன் ப்ரோமல் மற்றும் பொதுநலவாய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே ஆகியோரும் புளோரன்ஸ் டயமண்ட் லீக்கில் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்
- இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன் அபேகோன்
- உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் அதிசிறந்த முன்னேற்றம்
டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது மற்றும் ஒரே வீரராக வலம் வருகின்ற யுபுன், 2021ஆம் ஆண்டு முதல் டயமண்ட் மெய்வல்லுனர் தொடரில் இலங்கை சார்பில் போட்டியிட்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
இதில், கடந்த ஆண்டு சூரிச் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், 5ஆவது இடத்தைப் பிடித்து அசத்தினார். அதுமாத்திரமின்றி, கடந்த ஆண்டு 5 டயமண்ட் லீக் போட்டிகளில் அவர் பங்குபற்றியிருந்தார்.
எனவே, 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனையாளரான யுபுன் அபேகோன், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா 100 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அதேபோல, 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் கடந்து 10 செக்கன்களுக்கு குறைவான நேரத்தில் 100 மீட்டரை நிறைவு செய்த முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<