டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் யுபுன்

IAAF Diamond League Final – Zurich 2022

208

டயமன்ட் லீக் மெய்வல்லுனர் தொடர் 2022 இல் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் நட்சத்திர குறுந்தூர வீரர் யுபுன் அபேகோன் தகுதி பெற்றுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் மாதம் 8, 9 ஆகிய திகதிகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி யுபுன் போட்டியிடவுள்ளார்.

சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் தொடர் 6 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் இரண்டு கட்டங்களில் பங்குபற்றியிருந்தார்.

இந்த நிலையில், யுபுன் அபேகோன், நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து 4 புள்ளிளையும், சுவீடனின் ஸ்டொக்ஹோமில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து 5 புள்ளிகளையும் பெற்று ஒட்டுமொத்தமாக 9 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்மூலம் இம்முறை டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய முதல் 8 வீரர்களில் ஒருவராக இடம்பிடித்து இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை யுபுன் அபேகோன் பெற்றுக் கொண்டுள்ளார்.  மேலும், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு யுபுன் அபேகோன் தகுதி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த ஆண்டு நடைபெற்ற உலகில் பல்வேறு முன்னணி மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்குகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்திய யுபுன், கடந்த ஜுலை மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 42ஆவது Resisprint International சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம், 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

இந்த நிலையில், அண்மையில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார்.

இது இவ்வாறிருக்க, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் யொஹான் பிளேக், கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ், பிரித்தானியாவின் ரீஸ் ப்ரெஸ்கோட் மற்றும் தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே உள்ளிட்ட உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<