தெற்காசியாவின் அதிவேக வீரரும், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரருமான யுபுன் அபேகோன், இத்தாலியில் நேற்று (18) நடைபெற்ற Savona International 2022 போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
2022 பருவகாலத்தில் தனது முதலாவது 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியை 10.04 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட +2.3 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரம் இலங்கை சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை.
சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளின் படி, குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் வீரரொருவர் போட்டியை நிறைவு செய்த பிறகு காற்றின் திசைகாட்டி இரண்டை விட குறைவாக இருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக இருந்தால் வெற்றி மாத்திரமே வழங்கப்படும் தவிர, குறித்த காலப்பெறுமதி ஒருபோதும் சாதனையாக கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
இதன்படி, யுபுன் அபேகோனிhல் நிலைநாட்டிய காலப்பெறுமதியானது 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவரினால் எந்தவொரு காலநிலையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிசிறந்த தூரமாக பதிவாகியது.
- 150 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய சாதனையை முறியடித்த யுபுன்
- உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் வரலாற்று பதிவு
- அமெரிக்காவில் உஷான் திவங்கவுக்கு மற்றுமொரு வெற்றி
முன்னதாக, கடந்த ஆண்டு ஜேர்மனியின் டெஸாவு நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.09 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கையின் மின்னல் வேக வீரராக முத்திரை பதித்தார்.
எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட 2.2 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரம் இலங்கை சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தகுதிச்சுற்றை 10.04 செக்கன்களில் ஓடிய யுபுன் அபேகோன் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியை 10.16 செக்கன்களில் ஓடிமுடித்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில் முதலிடத்தை நடப்பு ஒலிம்பிக் சம்பியனான இத்தாலியின் மார்ஸல் ஜேகொப்ஸ் (Marcell Jacobs) பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 10.04 செக்கன்களில் ஓடி முடித்தார்.
இதனிடையே, இரண்டாவது இடத்தை ஆர்தர் சிஸ்ஸியும் (10.10 செக்.), மூன்றாவது இடத்தை ஜிம்மி விகௌட்டும் (10.14 செக்.) பெற்றுக்கொண்டனர்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<