சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் நேற்று இரவு (09) நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப் போட்டியில் கடைசிவரை கடும் முயற்சியுடன் ஓடிய யுபுன் அபேகோன், 10.25 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 9ஆவது இடத்துடன் திருப்தி அடைந்தார்.
சுவிட்சர்லாந்து வீரர் சில்வான் விக்கியும், யுபுன் அபேகோனும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.25 செக்கன்கள் என்ற ஒரே நேரப்பெறுதியைப் பதிவுசெய்திருந்தாலும், நிழல்பட முடிவுகளின் (பொட்டோ பினிஷ்) பிரகாரம் யுப்புனுக்கு கடைசி இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் முதல் முறையாக பங்குகொண்ட யுபுன், போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதில் வெளிப்படுத்திய திறமை காரணமாக அவருக்கு சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அத்துடன், குறித்த போட்டியில் அவர் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டாலும், உலக மெய்வல்லுனர் சங்கத்தின் புள்ளிப்பட்டியலில் 1,212 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.
எனவே, இந்தப் புள்ளிகளால் அவருக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற வாய்ப்பு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, 12 சுற்றுக்களாக நடைபெற்ற இந்த வருடத்துக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனரில் ஒட்டுமொத்தமாக 24 வீரர்கள் பங்குகொண்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 5.00 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தையும் யுபுன் அபேகோன் பெற்றுக்கொண்டமை இங்கு கவனிக்கத்தது.
டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்
இதனிடையே, சூரிச் டயமண்ட் லீக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.87 செக்கன்களில் நிறைவுசெய்த அமெரிக்க வீரர் பிரெட் கெர்லி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் ஆவார்.
அத்துடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் அன்ட்ரே டி கிராஸ் 9.89 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, 9.91 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மற்றுமொரு அமெரிக்க வீரர் ரொன்னி பேக்கர் 3ஆம் இடத்தை பெற்றனர்.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…