இத்தாலியில் நடைபெற்ற 12ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் (Castiglione International Meeting 2022) பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.
இன்று நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் 200 மீட்டர் தூரத்தை 20.37 செக்கன்களில் ஓடி முடித்தே யுபுன் அபேகோன், இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகைளை முறியடித்தார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் வினோஜ் சுரஞ்சய நிலைநாட்டிய 20.68 செக்கன்கள் என்ற இலங்கை சாதனையையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யுபுன் அபேகோன் முறியடித்தார்.
அத்துடன், இந்திய வீரர் அம்லன் போர்கொஹெய்ன் கடந்த மாதம் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டிய 20.52 செக்கன்கள் என்ற சாதனையையும் யுபுன் முறியடித்து புதிய தெற்காசிய சாதனை படைத்தார்.
- 100 மீட்டர் இலங்கை சாதனையை மீண்டும் தவறவிட்டார் யுபுன்
- 150 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய சாதனையை முறியடித்த யுபுன்
- அமெரிக்காவில் உஷான் திவங்கவுக்கு மற்றுமொரு வெற்றி
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் சவோனா சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.15 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் கடந்த 2 ஆண்டு காலப்பகுதியில் யுபுன் அபேகோன் இலங்கை சாதனை, தெற்காசிய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்து மெய்வல்லுனர் போட்டிகளில் முன்னணி வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இதில் ஆண்களுக்கான 60 மீட்டர் (6.59 செக்.), ஆண்களுக்கான 100 மீட்டர் (10.15 செக்.), ஆண்களுக்கான 200 மீட்டர் (20.37 செக்.) ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் தெற்காசிய சாதனைகளை முறியடித்த அவர், ஆண்களுக்கான 150 மீட்டர் (15.16 செக்) ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனையையும் கடந்த சில வாரங்களுக்கு முன் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<