தேசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன்

383
TAMIL SPORTS NEWS

இத்தாலியின் சவோனாவில் (Savona)  நடைபெற்ற சர்வதேச சிட்டே டி சவோனா (International Città di Savona) தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

யுபுன் அபேகோன் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 10.15 செக்கன்களில் போட்டித்தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன், கடந்த ஆண்டு 100 மீட்டரில் 10.16 செக்கன்களில் போட்டித்தூரத்தை கடந்த தனது தேசிய சாதனையை 0.01 செக்கனில் முறியடித்துள்ளார். 

>> தெற்காசியாவின் அதிவேக வீரர் யுபுனுக்கு மற்றொரு சர்வதேசப் பதக்கம்

போட்டியின் முதலிடம் 10.13 செக்கன்களில் போட்டித்தூரத்தை முடித்த இத்தாலியின் லோரென்சோ பட்டாவிற்கும், மூன்றாவது இடம் 10.25 செக்கன்களில் போட்டித்தூரத்தை முடித்த மேட்டியோ மெல்லுசோவிற்கும் கிடைத்தது.

போட்டியின் ஆரம்ப சுற்றை, யுபுன் அபேகோன் 10.13 செக்கன்களில் நிறைவுசெய்த போதும், காற்றின் வேகம் 2.2+ ஆக இருந்ததால் குறித்த பதிவு, சாதனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நீண்ட காலமாக குறுகிய தூர ஓட்டப்பந்தயங்களில் மிகச்சிறந்த திறமையினை யுபுன் அபேகோன் வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உள்நாட்டு போட்டித்தொடரில் 60 மீட்டர் இலங்கை தேசிய சாதனையை 6.59 செக்கன்களில் முறியடித்து, சாதனையை பதிவுசெய்திருந்தார்..

பன்னல தேசிய பாடசாலை மற்றும் வெண்ணப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான யுபுன் அபேகோன், தற்போது இத்தாலியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<