பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் யுபுன் அபேகோன்?

Paris Olympics 2024

29
Yupun Abeykoon

இலங்கையின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இலங்கையின் முக்கிய நம்பிக்கை வீரராக இருந்த இவர், காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கான கடைசி பல வாய்ப்புகளை பூர்த்திசெய்ய தவறியிருந்தார்.

>>பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன<<

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறமுடியாமை தொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் யுபுன் அபேகோன் பதிவிட்டுள்ளார்.

“இந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற கடந்த மூன்று ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சி மேற்கொண்டாலும், கடைசி நேரத்தில் அந்த பணிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. தற்போதுள்ள உபாதை காரணமாக, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாலும், எதிர்வரும் 20 நாட்களுக்குள் என்னால் முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாது” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் யுபுன் அபேகோன் பங்கேற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உபாதை காரணமாக அவரால் ஓட்டத்தை முடிக்க முடியவில்லை. இதனால், இந்த வருட ஒலிம்பிக்கிற்கான தனது கனவை நனவாக்க முடியாவிட்டாலும், உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்து எதிர்காலத்தில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பேன் என தெரவித்துள்ளார்.

இலங்கை சார்பாக 100 மீற்றர் போட்டியை 9.96 வினாடிகளில் நிறைவு செய்து இலங்கை வரலாற்றில் வெற்றிகரமான 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரராக உள்ள யுபுன் அபேகோன், இலங்கைக்காக பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த இவர், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<