டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றுப் போட்டியில் களமிறங்கிய இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் 3ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட அவர், 10.32 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 8ஆவது நாளான இன்று மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஒலிம்பிக் 800 மீட்டர் தகுதிச்சுற்றில் நிமாலிக்கு ஏமாற்றம்
இதில் இலங்கையர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் களமிறங்கினார்.
ஏழு சுற்றுக்களைக் கொண்ட தகுதிச்சுற்றில் 3ஆவது சுற்றின் ஐந்தாவது சுவட்டில் யுபுன் அபேகோன் போட்டியிட்டார். தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் தகுதிச்சுற்றில் இலகுவாக வெற்றிபெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 8 பேர் பங்குபற்றிய 3ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியை ஆரம்பிப்பதில் சிறிது பின்னடைவை சந்தித்த யுபுன் அபேகோன் போட்டியை 10.23 செக்கன்களில் நிறைவுசெய்து ஆறாவது இடத்தைப் பெற்று பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
மேலும் இன்றைய தினம் அவர் பதிவு செய்த நேரப்பெறுதி அவரது தனிப்பட்ட மிகமோசமான நேரப் பெறுதியாகும்.
Photos: Day 8 – 2020 Tokyo Olympic Games
முன்னதாக கடந்த மே மாதம் இத்தாலியின் செவோனாவில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லலுனர் போட்டியில் கலந்துகொண்ட யுபுன், 10.15 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய தெற்காசிய மற்றும் இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, யுபுன் அபேகோன் பங்குகொண்ட தகுதிச்சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜேகோப் 9.94 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்றார். ஜமைக்கா வீரர் (10.04 செக்.) இரண்டாம் இடத்தையும், தென்னாபிரிக்கா வீரர் மஸ்வன்கன்யி (10.12 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொத்தமாக 7 தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதன் 3ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்ற யுபுன், 7 தகுதிச்சுற்றுப் போட்டிகளிலும் பங்குபற்றிய 46 வீரர்களுக்கான ஒட்டுமொத்த நிலையில் 42ஆவது இடத்தையே பெற்றார்.
ஒலிம்பிக் மெய்வல்லுனர் முதல் தங்கம் எத்தியோப்பியா வசமானது
ஒவ்வொரு தகுதிச்சுற்றுப் போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற வீரர்களும் ஏனையவர்களில் அதிசிறந்த நேரப்பெறுதிகளைப் பதிவுசெய்த 6 வீரர்களுமாக 24 பேர் அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் மெய்வல்லுனரில் இலங்கை சார்பாக இரண்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட நிமாலி லியனஆராச்சி எட்டாவது இடத்தைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…