இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான யோக்சைர் (Yorkshire) ரவிச்சந்திரன் அஷ்வின், கேசவ் மஹராஜ், நிகோலஸ் பூரன் ஆகிய வீரர்களுடன் தமது நாட்டின் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்திருக்கின்றது.
Catch me if you can: முத்தையா முரளிதரன்
கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான……
முறையே இந்திய, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளின் சுழல் பந்துவீச்சாளர்களான அஷ்வின், கேசவ் மஹராஜ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான கௌண்டி போட்டிகளுக்காகவும், மேற்கிந்திய தீவுகளின் பூரன் T20 பிளாஸ்ட் போட்டிகளுக்காகவும் யோக்சைர் கழகத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கௌண்டி கிரிக்கெட் தொடர் அடங்கலாக இங்கிலாந்தில் நடைபெற இருந்த அனைத்து கிரிக்கெட் தொடர்களும் கொரோனா வைரஸ் பீதியினால் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலையே யோக்சைர் கிரிக்கெட் கழகம் இந்த வீரர்களின் ஒப்பந்தங்களை இரத்துச் செய்திருக்கின்றது. வீரர்களின் ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்ட விடயத்தினை யோக்சைர் கழகத்தின் கிரிக்கெட் இயக்குனரான மார்டின் மொக்சோன் உறுதி செய்திருந்தார்.
”இந்த (ஒப்பந்தங்கள் இரத்தாகிய) விடயம் தொடர்பில் வீரர்களின் புரிந்துணர்வை நான் பாராட்டுகின்றேன்.”
”கொரோனா பிரச்சினை நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் வீரர்களுடனும், அவர்களது முகவர்களுடனும் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருகின்றோம். அவர்கள் தற்போது இருக்கும் நிலைமைகளை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்த வீரர்களை மிகவும் விரைவில் எங்களது மைதானங்களில் பார்க்க விரும்புகின்றோம்.” என்றார்.
ரவிச்சந்திரன் அஷ்வின், கேசவ் மஹராஜ், நிகோலஸ் பூரன் ஆகிய வீரர்களுக்கு முன்னதாக இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்த நதன் லயன், பி.ஜே. வட்லிங், கிளன் மெக்ஸ்வெல், ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் மேட் ஹென்ரி ஆகிய வெளிநாட்டு வீரர்களின் ஒப்பந்தங்களும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<