இலங்கையைச் சேர்ந்த இளம் கார்பந்தய வீரரான யெவான் டேவிட், பிரபல்யமிக்க Formula 3 கார்பந்தய தொடரில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்த தனது வாழ்க்கைப் பயணத்தினை அனைவருக்கும் விளக்கமளிக்கும் ஊடக நிகழ்வு இவ்வாரம் “80” கிளப்பில் இடம்பெற்றது.
>>பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டனில் சம்பியனாகிய இலங்கை வீராங்கனைகள்
வெறும் 17 வயது மாத்திரம் நிரம்பிய யெவான் டேவிட், இலங்கையில் இருந்து Formula 3 தொடரில் பங்கேற்கும் அளவிற்கு மிக இளவயதிலேயே வளர்ந்த ஒருவராகக் காணப்படுகின்றார். அவர் தனது இந்த வெற்றிக்கதைக்கு காரணமாக இருந்த அனைவர் பற்றியும் ஊடக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.
Karting இல் இருந்த ஆர்வம் மூலம் தன்னை ஒரு கார் பந்தய வீரராக வளர்த்துக் கொண்ட யெவான், இளவயதிலேயே பல தொடர்களில் வென்று சர்வதேச மோட்டர் வாகன பந்தய உலகில் ஒரு நட்சத்திரமாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி உலகின் பல்வேறு கார்பந்தய தொடர்களில் இலங்கை சார்பாக பங்கேற்று தனது தாயக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள யெவான், அண்மையில் இத்தாலியின் மொன்ஸாவில் நடைபெற்ற Euro Formula Open Championship இல் வென்றதன் மூலம் இதனை வென்ற முதலாவது இலங்கையர் எனும் பெருமையை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச புகழ்பெற்ற மோட்டர் பந்தய வர்ணனையாளரான ஜேக் சான்சன் யெவான் டேவிட்டின் ஊடக நிகழ்வில் கருத்து வெளியிடும் போது “(யெவான்) இலங்கையை Formula 1 உலகுக்கு கொண்டு செல்லும் நபர்” எனக் குறிப்பிட்டார்.
அதேநேரம் யெவானின் முகாமையாளர் ஹொரியா டொட்டு பேசும் போது, “இந்த ஆண்டு நாம் அவதானித்த பெருமளவு முன்னேற்றம் மற்றும் திறமையின் அடிப்படையில், யெவானுக்கு ஆகாயமே எல்லையாக அமைந்திருக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தனக்கு எதிர்கால இலட்சியம் குறித்து கருத்து வெளியிட்ட யெவான், “ (இலங்கை) தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்த வாய்ப்பு மிகவும் பெருமைக்குரியதாக அமைந்திருப்பதுடன், விளையாட்டின் உச்ச நிலைக்கு எமது கொடியை கொண்டு செல்வதற்கு நான் முயற்சிக்கின்றேன்.” என்றார்.
ThePapare.com உம் யெவான் டேவிட்டுக்கு அவரின் Formula 1 நோக்கிய பயணத்தில் வெற்றியடைந்து சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<