ஐசிசி இன் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை அவுஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்டும் வெற்றி கொண்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி அண்மையில் அறிவித்திருந்தது.
இதில் ஆடவர் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் அடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
இந்த நிலையில், வாக்குகளின் அடிப்படையில் பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.
அத்துடன், மொத்தமாக இத்தொடரில் 712 ஓட்டங்களைக் குவித்தார். அதுமட்டுமின்றி இத்தொடரில் மொத்தமாக 26 சிக்ஸர்களையும் ஜெய்ஸ்வால் விளாசி உலக சாதனை படைத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஐசிசி இன் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- T20 உலகக் கிண்ணத்தில் விராட் கோலிக்கு ஓய்வா?
- T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் மொஹமட் ஷமி
- பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு
இது தொடர்பில் ஐசிசி இணையத்தில் ஜெய்ஸ்வால் வழங்கிய நேர்காணலில், ‘இது என்னுடைய ஒரு சிறந்த செயல்பாடாகும். முதல் முறையாக இப்போது தான் நான் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறேன். இந்த தொடரை நாங்கள் 4 – 1 என்ற கணக்கில் வென்றோம். ஐசிசி கொடுத்த இந்த விருதை வென்றதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இதே போல செயல்படுவேன் என்று நம்புகிறேன்‘ என்று கூறினார்.
இதனிடையே, மகளிர் வீராங்கனைகளுக்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் அவுஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், ஐக்கிய அரபு இராச்சியம் அணியின் வீராங்கனைகளான கவிஷா எகொடகே மற்றும் ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் வாக்குகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா மகளிர் அணியின் சகலதுறை வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<