ஒரு மனிதனை அவனது வாழ்க்கையில் உயர்த்திவிடுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு போதும். ஆனால் குறித்த வாய்ப்பு நினைத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. எப்பொழுதும் வாய்ப்புகள் வருவதுமில்லை. ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் யதார்த்தத்தை எதிர்த்து போராட வேண்டும். தொடர்ந்து போராட்டத்தையும், வலியையும் தாங்கிக்கொண்டு சாதிக்க துடிக்கும் ஒருவனுக்கு, உலகம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை பரிசாக அளிக்கும் என்பதற்கு இந்திய இளையோர் அணியில் இடம்பிடித்திருக்கும் யசஷ்வி ஜெய்ஸ்வால் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும், இலட்சியத்துடனும் இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் பின்தங்கிய குடும்பமொன்றில் இருந்து மும்பை நோக்கி பயணித்த 11 வயதான யசஷ்வி ஜெய்ஸ்வால், இப்போது இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் அணிகளுக்கு இடையிலான தொடரில் விளையாடுகிறார் என்றால் அதனை யாராலும் நம்ப முடியாது.
இலங்கையை இலகுவாக வீழ்த்திய இந்திய இளையோர் அணி
பின்தங்கிய குடும்பம், தங்குவதற்கு வீடு இல்லை, சாப்பிடுவதற்கு உணவு இல்லை, அநேகமான அவமானங்களுக்கு மத்தியில், மும்பையில் தனியொருவனாக “பாணி பூரி” விற்பனை செய்து, இன்று இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்து, தனக்கென ஒரு அடையாளத்தை யசஷ்வி ஜெய்ஸ்வால் என்ற 17 வயது வீரர் பதிவு செய்துள்ளார்.
அதுமாத்திரமின்றி வெற்றிக்காக ஒருவன் இவ்வளவு போராட முடியும் என்பதையும் புரியவைத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. தனது அறிமுக போட்டியில் யசஷ்வி ஜெய்ஸ்வால் பெற்றது 15 ஓட்டங்களாக இருந்தாலும், அவர் கடந்து வந்த தடைகளும், வலிகளும் எம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை.
யார் இந்த யசஷ்வி ஜெய்ஸ்வால்?
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் – பஹதோய் என்ற நகரத்தில், சிறிய கடைக்காரர் ஒருவரின் மகனாக பிறந்தவர் யசஷ்வி ஜெய்ஸ்வால். வறுமையான குடும்பம் என்றாலும், யசஷ்வியின் கனவு இந்திய தேசிய அணிக்காக, கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான். இதனை நிறைவேற்றுவதற்காக தனது 11 வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்து, கடந்த 2011 ஆம் ஆண்டு யசஷ்வி தனது மாமா சந்தோஷுடன் மும்பைக்கு வந்துள்ளார்.
யசஷ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் எவ்வாறு தனியாக இருப்பார் என அவரது தந்தைக்கு கவலை இருந்தாலும், அதனை தாங்கிக்கொண்ட அவர், மகனின் இலட்சியத்துக்காக மும்பை செல்ல சம்மதித்துள்ளார்.
ஒன்றும் தெரியாத 11 வயதில், தனது எதிர்காலத்தை தேடி வந்த யசஷ்வி அடைந்த துன்பங்கள் எல்லையல்ல. மாமா சந்தோஷுடன் வந்த இவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. மாமாவின் வீட்டில் இடம் இல்லாததால், யசஷ்வி ஜெய்ஸ்வாலை அவரது மாமா, பால் பொருட்கள் விற்பனை செய்யும் இடமொன்றில் வேலைக்கு சேர்த்து, அங்கேயே தங்க வைத்துள்ளார்.
குறித்த இடத்தில் வேலை செய்துகொண்டே ஜெய்ஸ்வால் தனது பயிற்சியை ஆரம்பித்தார். குறித்த விற்பனை நிலையத்தை சுத்தம் செய்துவிட்டு, காலை 5 மணிக்கு பயிற்சிக்காக மைதானத்துக்கு செல்லும் இவர், மீண்டும் குறித்த இடத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும்.
எனினும் தொடர்ந்து பயிற்சி மற்றும் வேலை என இரண்டடையும் செய்து, ஜெய்ஸ்வால் களைப்படைந்துவிட, ஒரு சில நாட்களின் பின்னர் அவரால் விற்பனை நிலையத்தில் ஒழுங்காக வேலை பார்க்க முடியவில்லை. திடீரென ஒருநாள் அங்கிருந்தவர்கள் அவருடைய உடைமைகளை வெளியில் எறிந்து, வேலையை விட்டு நிற்குமாறு கூறியுள்ளனர். இதனால் யாரும் இல்லாத அநாதையாக மும்பையில் தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றும் புரியாமல் நின்ற ஜெய்ஸ்வால், சிறிது நேரத்துக்கு பின்னர் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு மும்பையில் உள்ள, அசாட் மெய்டான் என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.
இவ்வருட இறுதியில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்
குறித்த பகுதிக்குச் சென்று முஸ்லிம் யுனைடட் விளையாட்டு கழகத்தை நடத்தும் இம்ரான் என்பவரிடம் யசஷ்வி உதவி கேட்க, குறித்த நபர் அவரை சிறிய கூடாரம் போன்ற இடமொன்றில் தங்கவைத்துள்ளார். அந்த இடத்தில் பல்வேறு துன்பங்களுக்கு யசஷ்வி முகங்கொடுத்தார். குறித்த கூடாரத்தில் மின்சாரம் இல்லை, ஒழுங்கான கழிவறை இல்லை, உதவிக்கு யாரும் இல்லை. இந்த சிறிய வயதில் இத்தனை பிரச்சினைகள். எனினும் குறிக்கோள் ஒன்றிற்காக விடாப் பிடியாய் நின்றார் யசஷ்வி.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால் துன்பங்கள் அவரை துரத்த தவறவில்லை. வெயில் காலங்களில் கூடாரத்தில் தங்கமுடியவில்லை. அதிக வெப்பம் அவரை வாட்டியெடுத்தது. பணம் இல்லாமல் வெறும் வயிற்றில் உறங்கிய நாட்கள் பல. அவரை போன்ற வயதில் உள்ள பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் உணவு கொண்டு வந்து தரும் போது, அதனைப் பார்த்து தனக்கு யாரும் இப்படி இல்லையே? என்ற ஏக்கமும் யசஷ்வியை தாக்க மறுக்கவில்லை.
கஷ்டத்தை கூறுவதற்கு அருகில் யாரும் இருக்கவில்லை. அவரது கூடாரத்தில் தங்கியிருந்த மைதான பராமரிப்பாளர்களும் ஜெய்ஸ்வாலை அடிப்பது, திட்டுவது என மோசமாக நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னால் தாக்குபிடிக்க முடியுமா? என்ற எண்ணமும் யசஷ்விக்கு எழுந்துள்ளது.
அத்துடன், தொடர்ந்து மும்பையில் ஜீவிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் உணவும் இல்லை. பணமும் இல்லை என்ற நிலையில், இரவில் பாணி பூரி விற்கும் தொழிலை யசஷ்விஆரம்பித்துள்ளார். பாணி பூரி விற்கும் பணத்தில் தனது வயிற்று பசியையும் தீர்த்துக்கொண்டு, பயிற்சியையும் தொடர்ந்துள்ளார். பாணி பூரி விற்கும் இடத்திற்கு அவருடன் பயிற்சி பெறும் சக வீரர்கள் வரக்கூடாது என யசஷ்வி கடவுளை வேண்டிக்கொள்வார். எனினும் அப்படி யாராவது வந்தால், அவர்களை எதிர்கொள்ளும் போது, பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார்.
பாணி பூரி விற்கும் பணம் அவரது தேவைகளை பூர்த்தி செய்ய போதவில்லை என்பதால், தன்னுடன் வயது கூடிய வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அதில் 100 அல்லது 200 ரூபாயை சம்பாதித்து வந்துள்ளார். அதுவும் அவரது தேவைக்கு போதவில்லை. பசியில் வாடியுள்ளார். இத்தனை வலிகளைத் தாண்டியும் கடவுளிடம் தனக்கு ஒரு வாய்ப்பை தருமாறு வேண்டி கண்ணீர் விட்ட சந்தர்ப்பங்களும் அதிகம்.
ஒரு கட்டத்தில் இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் தனிமையை யசஷ்வி ஜெய்ஸ்வால் உணர்ந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியவில்லை. கனவுகள் பறிபோய்விடும் என்ற எண்ணமும் அவருக்குள் நுழைந்தது. இத்தனை நாட்களும் தனியொருவனாய் பாடுபட்ட யசஷ்வி ஜெய்ஸ்வாலின் போராட்டங்களுக்கு ஜுவாலா சிங் என்ற பயிற்றுவிப்பாளரின் வருகை கஷ்டங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
மும்பையில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் ஜுவாலா சிங், யசஷ்வி ஜெய்ஸ்வாலை கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். இதன் போது மைதானத்தில் A பிரிவு பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, ஜெய்ஸ்வால் சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளார். இதனை பார்த்த பயிற்றுவிப்பாளர் யசஷ்வி ஜெய்ஸ்வாலை அழைத்து பேசியுள்ளார். அப்போது தங்கியிருக்கும் விடயத்தையும், தான் அனுபவித்து வரும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். குறித்த பயிற்றுவிப்பாளரும் இதே போன்ற பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், யசஷ்வி ஜெய்ஸ்வாலை தனது இடத்துக்கு அழைத்து பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
சுமதிபாலவின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை அர்ஜுன, அரவிந்த நிராகரிப்பு
பின்னர், பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபாடு காட்டிய யசஷ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடத் தொடங்கியுள்ளார். இதன்படி தனது திறமைகளை படிப்படியாக அதிகரித்துக்கொண்ட இவர், இன்று இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் மற்றும் பந்து வீச்சாளராக இடம்பிடித்து, தனது இலட்சியத்தை நிலைநாட்டியுள்ளார்.
இலங்கை இளையோர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யசஷ்வி ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்திருந்தாலும், இந்த சிறிய வயதில் இத்தனை துயரங்களையும், அவமானங்களையும் சந்தித்து, இறுதியில் தனது இலட்சியத்தை அடைந்த யசஷ்வி ஜேஸ்வாலை பாராட்டாமல் இருக்க முடியாது.
யசஷ்வி ஜெய்ஸ்வாலின் கூற்று…
“ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்காகப் போராடுங்கள். இலகுவில் விட்டுவிடக்கூடாது. எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்த்து போராட வேண்டும். உங்கள் மனது ஒரு விடயத்தை உறுதிசெய்து விட்டால் அதனை செய்வதற்கு முயற்சியுங்கள். உங்களது முயற்சியின் வெற்றி என்பது எதிர்காலம் தான். ஆனால் அதற்காக நாம் நிகழ்காலத்தில் போராடியே ஆகவேண்டும். நம்மை எதற்கும் தயாராக வைத்துக்கொள்வோம் என்றால் வெற்றி நிச்சயம்.”
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<