வெற்றிகரமாக நிறைவுற்ற xZahirians புட்சால் தொடர்

180

வன்டேஜ் ஆடை (Vantage Shirts) நிறுவனத்தின் அனுசரணையோடு இந்த ஆண்டு இரண்டாவது தடவையாக மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் (xZahirians) இடையே ஒழுங்கு செய்யப்பட்ட  புட்சால் கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றது. 

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரின் எண்ணக்  கருவிற்கு அமைவாக உருவாக்கப்பட்டிருந்த இந்த புட்சால் கால்பந்து தொடர், இந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு முதல் தடவையாக வன்டேஜ் ஆடை நிறுவனத்தின் அனுசரணையையும் பெற்றிருந்தது. 

பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இரண்டாவது xZahirians புட்சால்

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி, தமது பழைய மாணவர்கள் இடையில் (xZahirians)…

அதேவேளை இந்த ஆண்டுக்கான தொடர், கல்லூரியின் பழைய அதிபர்களை நினைவூட்டும் வகையில் நான்கு வித்தியாசமான கிண்ணங்களுக்காக வெவ்வேறு பிரிவுகளில் விளையாடப்பட்டிருந்தது.  

அதில் 42 இற்கு மேற்பட்ட வயதுப் பிரிவினைச் சேர்ந்த மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் டி.ஜே. சாமுவேல் நினைவுக் கிண்ணத்திற்காக இந்த புட்சால் தொடரில் போட்டியிட்டிருந்தனர். டி.ஜே. சாமுவேல் நினைவுக் கிண்ணம் ஸாஹிரா கல்லூரியின் 1995ஆம் ஆண்டு குழு (Batch) மாணவர்கள் மூலம் வெற்றி கொள்ளப்பட ஸாஹிராவின் 1994 ஆம் ஆண்டு குழு மாணவர்கள் டி.ஜே. சாமுவேல் நினைவுக் கிண்ணத்திற்காக இடம்பெற்ற போட்டிகளில் இரண்டாம் இடத்தினை பெற்றிருந்தனர். 

அதேவேளை, 42 இற்கு உட்பட்ட வயதுப் பிரிவுக்கான மாணவர்கள் கே.ஜே. பொன்னையா சவால் கிண்ணத்திற்காக தங்களிடையே இந்த புட்சால் தொடரில் மோதியிருந்தனர். தொடர்ந்து, கே.ஜே. பொன்னையா சவால் நினைவுக் கிண்ணத்தின் சம்பியன்களாக 1998 ஆம் ஆண்டு குழு மாணவர்கள் மாற, இரண்டாம் இடம் 1999 ஆம் ஆண்டு குழு மாணவர்களுக்கு கிடைத்திருந்தது.

இதேநேரம், கே.எம். சம்சுதீன் சவால் கிண்ணம் மாவனல்லை ஸாஹிராவின் 36 வயதுக்குட்பட்ட பழைய மாணவர்கள் இடையில் இடம்பெற்றிருந்தது. இந்த சவால் கிண்ணத்தின் வெற்றியாளர்களாக 2011 ஆம்  ஆண்டு குழு மாணவர்களின் B அணி மாற, இரண்டாம் இடம் 2008 ஆம் ஆண்டு குழு மாணவர்களின் A அணிக்கு கிடைத்திருந்தது. 

மாவனல்லை ஸாஹிராவின் இளவயது மாணவர்கள் அதிகமானோர் டி.எல்.எம். ஹனீபா நினைவுக் கிண்ணத்திற்காக தங்களிடையே பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர். அந்தவகையில், ஸாஹிரா கல்லூரியின் 26 வயதுக்குட்பட்ட பழைய மாணவர்களின் அதிகமானோர் டி.எல்.எம். ஹனீபா நினைவுக் கிண்ணத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு குழு மாணவர்களின் A அணியே சம்பியன் பட்டத்தினை சுவீகரித்தது. அதேவேளை, டி.எல்.எம். ஹனீபா நினைவுக் கிண்ணத்திற்காக இடம்பெற்ற புட்சால் போட்டிகளில் 2014 ஆம் ஆண்டு குழு மாணவர்களின் B அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. 

மேலும், இந்த ஆண்டுக்கான புட்சால் கால்பந்து தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய பழைய மாணவர்களுக்கு தங்கப் பாதணி விருதுகளும் வழங்கபட்டிருந்தன. 

இதில் 42 இற்கு மேற்பட்ட வயதுப் பிரிவில் 1995 ஆம் ஆண்டு குழு மாணவர்களான ஹிஷாம் மலிக் மற்றும் அபு ஹுசைன் நயீம் ஆகியோர் தங்கப் பாதணி விருதுகளை வென்றிருந்தனர். இதேவேளை 42 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவிற்கான தங்கப் பாதணி விருதினை 1998 ஆம் ஆண்டு குழு மாணவரான அஜ்வாட் அப்பாஸ் கான் வென்றிருந்தார். 

அதேநேரம், 36 வயதுக்கு உட்பட்டோருக்கான தங்கப் பாதணி விருது 2008 ஆம் ஆண்டு குழுவின் A அணி மாணவரான ஆசிர் குல்பி இற்கு கொடுக்கப்பட்டிருந்ததோடு, 26 வயதுக்கு உட்பட்டோருக்கான வயதுப் பிரிவின் தங்கப் பாதணி விருதினை 2018 ஆம் ஆண்டு குழு மாணவர்களின் A அணி வீரரான செல்வன். ரஷான் மொஹமட் வென்றிருந்தார். 

இந்த ஆண்டு நடைபெற்ற இந்த புட்சால் தொடர் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களை மீண்டும் ஒன்றிணைக்க ஒரு சந்தோசமான தருணத்தினை உருவாக்கி இருந்தது. அத்தோடு, இந்த புட்சால் தொடர் மூலம் சேகரிக்கப்பட்டிருக்கும் நிதி ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் சங்க நலன் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட இருக்கின்றமை முக்கிய அம்சமாகும். 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<