இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இன்னும் மூன்று தொடர்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு காணப்படுகின்றது.
>> அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜஸ்ப்ரிட் பும்ரா!
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் (திகதி – 09.01.2023)
நிலை | அணி | போட்டி | வெற்றி | புள்ளிகள் | வெற்றி வீதம் (%) |
1
|
அவுஸ்திரேலியா | 15 | 10 | 136 | 75.56 |
2 | இந்தியா | 14 | 8 | 99 | 58.93 |
3 | இலங்கை | 10 | 5 | 64 | 53.33 |
4 | தென்னாபிரிக்கா | 13 | 6 | 76 | 48.72 |
5 | இங்கிலாந்து | 22 | 10 | 124 | 46.97 |
6 | மேற்கிந்திய தீவுகள் | 11 | 4 | 54 | 40.91 |
7 | பாகிஸ்தான் | 14 | 4 | 64 | 38.10 |
8 | நியூசிலாந்து | 11 | 2 | 36 | 27.27 |
9 | பங்களாதேஷ் | 12 | 1 | 16 | 11.11 |
எஞ்சியிருக்கும் தொடர்கள்
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா – 4 டெஸ்ட் போட்டிகள் – (பெப்ரவரி/மார்ச் 2023) – இந்தியா
தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள் – 2 டெஸ்ட் போட்டிகள் – (பெப்ரவரி/மார்ச் 2023) – தென்னாபிரிக்கா
இலங்கை எதிர் நியூசிலாந்து – 2 டெஸ்ட் போட்டிகள் (மார்ச் 2023) – நியூசிலாந்து
அவுஸ்திரேலிய அணியின் வாய்ப்பு
அவுஸ்திரேலிய அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியினை சொந்த மண்ணில் வைத்து 2-0 வீழ்த்தியதனை அடுத்து 75.56 என்கிற வெற்றி சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது. எனவே அவுஸ்திரேலிய அணி ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் ஏற்கனவே தெரிவாகியிருக்கின்றது என்றே கூற முடியும்.
ஆனால், இலங்கை அணியும், இந்திய அணியும் தமக்கு எஞ்சியிருக்கின்ற டெஸ்ட் தொடர்களில் வைட்வொஷ் தொடர் வெற்றிகளை பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழக்கின்ற சாத்தியப்பாடு ஒன்று காணப்படுகின்றது. முன்னர் குறிப்பிட்டது போன்று அவுஸ்திரேலிய அணி தமது எஞ்சிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியினை அடுத்த மாத இறுதியில் எதிர்கொள்ளவிருக்கின்றது. இந்த தொடரில் வைத்து உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலிய அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்படும்.
இந்திய அணிக்கான வாய்ப்பு
மற்றைய தொடர்களின் முடிவுகளை கருத்திற் கொள்ளாமல் தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 4-0 எனக் கைப்பற்ற வேண்டும். அப்படி முடியாது போயின் ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 3-1 எனக் கைப்பற்றுவதும் இந்திய அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும்.
>> இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து லயன்ஸ் அணி
இதேநேரம் இந்திய அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 2-2 என சமநிலை செய்யும் போதோ அவ்வணி 56.94 என்கிற வெற்றி சதவீதத்தினையே பெறும் என்பதால் இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்புக்காக மற்றைய தொடர்களின் முடிவுகளை கருத்திற் கொள்ள வேண்டி இருக்கும். அதேநேரம் இந்திய அணி அவுஸ்திரேலிய தொடரில் 2-2 என்கிற தொடர் முடிவினை விட மோசமான முடிவினைக் காட்டும் போதும் இறுதிப் போட்டி வாய்ப்புக்காக மற்றைய தொடர்களின் முடிவுகளை கருத்திற் கொள்ள வேண்டி இருக்கும்.
இலங்கை அணியின் வாய்ப்பு
இம்முறைக்கான ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை முதன் முறையாக பெறுவதற்கான வாய்ப்புக்கள் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இலங்கைக்கு காணப்படுகின்றன.
அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரினை 4-0 அல்லது 3-1 என கைப்பற்றும் போதும், இந்திய அணி 4-0 என அவுஸ்திரேலிய அணியினை வீழ்த்தும் போதும் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டி செல்வதற்குரிய இலகு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதேநேரம் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரினை 2-2 என சமநிலை செய்யவோ அல்லது அதனை விட மோசமான முடிவினையோ காட்ட வேண்டும். இந்திய அணி டெஸ்ட் தொடரினை 2-2 என சமநிலை செய்யும் போது, இலங்கை அணி தமக்கு எஞ்சியிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரினை 2-0 என கைப்பற்றினால் 61.11 என்கிற வெற்றி சதவீதத்துடன் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற முடியும். இதற்காக இலங்கை அணி தென்னாபிரிக்க – மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவினை கருத்திற் கொள்ளத் தேவையில்லை.
இதேவேளை, இலங்கை வீரர்கள் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலை செய்யும் போது இலங்கை அணிக்கு இறுதிப் போட்டி செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையின் வெற்றி வீதம் 52.78 ஆக மாறும். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 12 இற்கு குறைவான புள்ளிகளை எடுத்து, தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 16 இற்கு குறைவான புள்ளிகளையும் பெறும் போது இலங்கை அணி இறுதிப் போட்டியில் நுழைய முடியும். இதற்கு மாற்றமாக முடிவுகள் கிடைக்கும் போது இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு மிகவும் குறைவான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன.
தென்னாபிரிக்க அணிக்கான வாய்ப்பு
தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றி, மேற்குறிப்பிட்ட விடயங்கள் இலங்கை – நியூசிலாந்து, இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர்களில் நடைபெறாமல் போகும் போது தென்னாபிரிக்க அணிக்கும் இறுதிப் போட்டி வாய்ப்பு காணப்படுகின்றது.
>> உலகக் கிண்ணம் வெல்வதே திட்டம் – ஹார்திக் பாண்டியா
அதாவது தென்னாபிரிக்க அணி 2-0 என மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றும் போது அவர்களின் வெற்றி சதவீதம் 55.56 ஆக மாறும். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணி நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றி அல்லது அதனை விட மோசமான முடிவினைப் பதிவு செய்து இருக்கும் போதும், இந்திய அணி அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 21 இற்கு குறைவான புள்ளிகளை எடுக்கும் போதும் தென்னாபிரிக்க அணிக்கு இறுதிப் போட்டி செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
ஏனைய அணிகளின் நிலை?
புள்ளிப்பட்டியலில் முறையே 5ஆம் மற்றும் 6ஆம் இடங்களில் இருக்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தவிர்ந்த ஏனைய அணிகளுக்கு ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.
அதிலும் இங்கிலாந்தோ அல்லது மேற்கிந்திய தீவுகளோ இறுதிப் போட்டி செல்வதற்கான வாய்ப்பு உருவாகவே தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தமக்கு எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியினை தழுவ வேண்டும். எனினும், உண்மையில் அது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாக காணப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<