6ஆவது 20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளும் 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. 2010ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியன் பட்டம் வென்று இருந்தது. 2012ஆம் ஆண்டு இலங்கையைத் தோற்கடித்து மேற்கிந்திய தீவுகள் சம்பியன் ஆனது. 2ஆவது முறையாகக் கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் இரு அணிகளும் களமிறங்கின. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி முதலில் களத்தடுக்க தீர்மானம் செய்தார்.
இரு அணிகளினதும் ஒரு கண்ணோட்டம்
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சம் இருக்காது. கிறிஸ் கெய்ல், சார்லஸ், சாமுவேல்ஸ், ரசல், சமி, சிமன்ஸ், பிராவோ போன்ற வீரர்கள் உள்ளனர். ஓட்ட இலக்கு எவ்வளவாக இருந்தாலும் அதை எடுக்கக்கூடிய அணியாகத் திகழ்கிறது. மேலும் பந்து வீச்சிலும் சம பலத்துடன் இருந்தது
இங்கிலாந்து அணியில் ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஜொர்டன், வில்லெ, ரசீத், பிளங்கட் போன்றோர் இருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்து அணியும் சம பலத்துடன் காணப்பட்டது.
நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகள் விபரம்:
இங்கிலாந்து அணி :
ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், இயோன் மோர்கன், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் ஜொர்டான், அதில் ரஷீத், டேவிட் வில்லெ, லியாம் பிளங்கட்.
மேற்கிந்திய தீவுகள் அணி :
ஜொன்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ், லென்டல் சிமன்ஸ், என்டர் ரசல், தினேஷ் ராம்தின், டுவைன் பிராவோ, டெரன் சமி, கார்லோஸ் பிராத்வெய்ட், சாமுவேல் பத்திரி, சுலிமன் பென்.
நடுவர்கள் : ரொட் டக்கர் மற்றும் குமார் தர்மசேன
டெரன் சமியின் அழைப்பைத் தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினார்கள். கடந்த அரையிறுதிப் போட்டியில் அசத்திய ஜேசன் ரோய் பத்திரி வீசிய பந்தில் போல்ட் முறையில் ஆட்டம் இழந்து தனது விக்கட்டைப் பறிக்கொடுத்தார். அடுத்த ஓவரில் மற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹெல்ஸ் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி அதிர்ச்சியடைந்தது. அதனை அடுத்து களமிறங்கிய மோர்கன் பத்திரியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி கடும் பின்னடைவுக்கு உள்ளாகி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள் என்ற நிலையில் இருந்தது.
இதனை அடுத்து இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோய் ரூட்டும், ஜொஸ் பட்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுலிமன் பென் வீசிய ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஓட்ட வேகத்தை அதிகரித்தார். பின் மேலும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயன்ற பட்லர் 34 ஓட்டங்களோடு பிரத்வெய்ட் வீசிய பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் அணியை காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் ஜோய் ரூட் மீது விழுந்தது. ஆனால் அவர் துரதிஷ்டவசமாக 36 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. அதிகப்பட்சமாக ரூட் மற்றும் பட்லரைத் தவிர இறுதி நேரத்தில் வந்த பந்து வீச்சாளர் வில்லெ 21 ஓட்டங்களைப் பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணயின் பந்துவீச்சில் பிராவோ, பிரத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும் பத்திரி 2 விக்கட்டுகளையும் விழ்த்தினார்கள்.
துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஈடன் கார்டன் ஆடுகளத்தில் ஆக்ரோசமான மேற்கிந்திய அணி வீரர்களை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்ற நெறுக்கடியுடன் களமிறங்கியது இங்கிலாந்து. 156 என்ற இலக்குடன் க்றிஸ் கெயில் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். அனைவரையும் ஆச்சிரியப்படும் விதமாக இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் 2ஆவது ஓவரை வீச ரூட்டை அழைத்தார். கெயில் களத்தில் இருந்ததால் அந்த ஓவரில் சிக்ஸர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் கெயிலை 4 ஓட்டங்களோடும் சார்ல்சையும் 1 ஓட்டத்தோடும் ஆட்டம் இழக்கச் செய்து ஆரம்பத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை அளித்தார் ஜோய் ரூட்.
அதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுடனான போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெற்ற சிமன்ஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்து பெரும் அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து சாமுவெல்சும், பிரவோவும் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. பிராவோ ஒரு சிக்ஸ் அடித்து அதிரடியாக ஆடத் துவங்கிய உடனே 25 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரசலும், சமியும் சொற்ப நேரத்தில் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரப்பரப்பு கூடியது. ஆனால் சாமுவல்ஸ் மறு முனையில் நங்கூரம் போல் நின்று அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீச அதை பரத்வெயிட் எதிர்கொண்டார்.
முதல் பந்தை லேக் திசையினூடாக சிக்ஸ் அடித்தார். இதனால் ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் பக்கம் சற்று சாய்ந்தது. ஆனால் அடுத்த பந்திலும் பரத்வெயிட் சிக்ஸ் அடிக்க போட்டி முழுமையாக மேற்கிந்திய தீவுகள் பக்கம் சாய்ந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் கலக்கம் அடைந்தனர். அதன் பின் வீசப்பட்ட மூன்றாவது மற்றும் நான்காவது பந்தையும் சிக்ஸ் அடித்து இங்கிலாந்தின் உலகக் கிண்ணக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரத்வெயிட். இறுதில் 6ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரை 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி. அபாரமாக விளையாடிய சாமுவெல்ஸ் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு துணை புரிந்தார்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது 66 பந்துகளில் 85 ஓட்டங்களைப் விளாசி அணியின் வெற்றிக் கனவை நனவாக்கிய சாமுவல்ஸிற்கு வழங்கப்பட்டது. போட்டி தொடரின் சிறந்த வீரராக விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.
டி20 உலகக் கிண்ணம் 2016இல் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
– அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் – தமீம் இக்பால் (295 ஓட்டங்கள்)
– தனி ஒருவரால் பெறப்பட்ட அதிக ஓட்டம் – தமீம் இக்பால் (103*)
– அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய வீரர் – முஹமத் நபி (12 விக்கட்டுகள்)
– சிறந்த பந்துவீசிப் பிரதி – முஸ்தபிசுர் ரஹ்மான் (22 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகள்)
– அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் – விராத் கொஹ்லி (29 பவுண்டரி)
– அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் – தமீம் இக்பால் ( 14 சிக்ஸர்)
– அதிக ஸ்ட்ரயிக் ரேட் கொண்ட வீரர் – க்றிஸ் கெயில் (195.0)