கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிகள்: எதிர்பார்த்த அணிகளிடமிருந்து எதிர்பாரா முடிவுகள்

289
Photograph: Alessandro Di Marco/EPA

2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் சூடு பிடித்துள்ள நிலையில் வியாழக்கிழமை நடந்து முடிந்த போட்டிகளின் விபரங்கள் இதோ:

பிரேசில்  5-0 பொலிவியா

பிரேசில் மற்றும் பொலிவியாவிற்கிடையில் நடைபெற்ற போட்டியில் பிரேசில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் ஆரம்ப கோலினை நட்சத்திர வீரர் நெய்மார் போட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோடின்ஹோ அணியின் இரண்டாவது கோலைப்  போட்டார்.

மேலும் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணிக்காக பிலிபே லூயிஸ் மற்றும் கப்ரியல் ஜீசஸ் கோல்களைப் போட, ஆட்டத்தின் இறுதி கோலினை ரொபெர்ட்டோ பெர்மின்ஹோ போட்டார். உலகக் கால்பந்தின் ஜாம்பவான்களான பிரேசில் அணி  பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆர்ஜென்டினா 2-2 பேரு

உலகப் புகழ் பெற்ற நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி இன்றி களமிறங்கிய ஆர்ஜென்டினா அணியால் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற முடியாமற் போனது.

போட்டியின் முதல் கோலை ஆர்ஜென்டினாவின் பியூனஸ் மோரி போட்டாலும் பேருவின் போலோ குவேரா கோலொன்றைப் போட்டார்.

ஹிகுவேன் மீண்டும் ஆர்ஜென்டினா சார்பில் கோலொன்றைப் போட்டு அணியை முன்னிலை பெறச் செய்தார்.

எனினும் ஆட்டம் முடிவதற்கு இரு நிமிடங்களில் பேருவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை கிறிஸ்டியன் சுயேவா கோலாக மாற்றி போட்டியை சமநிலையில் முடிவடையச் செய்தார்.

ஸ்பெயின் 1-1 இத்தாலி

பலம் மிக்க இரண்டு அணிகளுக்கெதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் முதல் கோலை ஸ்பெயின் அணி வீரர் விட்டோலோ பெற்றுக் கொண்டார். இத்தாலி கோல் காப்பாளர் விட்ட தவறினை சரிவரப் பயன்படுத்திய விட்டோலோ அதனை கோலாக்கினார்.

ஆனால் தொடர்ந்து போராடிய இத்தாலிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிட்டியது. அதனை சரிவரப் பயன்படுத்திய டி ரொஸ்ஸி கோலாக மாற்றினார்.

அதன்பின் வீரர்கள் முனைப்பாக கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டாலும் யாரும் கோலொன்றையும் போடாததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

வேல்ஸ் 2-2 அவுஸ்திரியா

இவ்வருடம் நடைபெற்ற யூரோ கிண்ணத்தில் பிரகாசித்த வேல்ஸ் அணி இப்போட்டியை வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர்களால் இப்போட்டியை வெற்றி கொள்ள முடியாமற் போனது.

போட்டியின் ஆரம்பத்தில் துரதிஷ்டவசமாக அவுஸ்திரியாவின் கெவின் விம்மர் ஓன் கோல் ஒன்றைப் போட்டார்.

ஆனால் சுதாரித்து விளையாடிய அவுஸ்திரியாவிற்கு மார்க்கோ ஆர்னாடோவிச் கோல் ஒன்றை அடித்து போட்டியை சமன் செய்தார்.

எனினும் வேல்ஸ்சின் ஜோ அலன் கோல் ஒன்றைப் போட போட்டி சூடு பிடித்தது. எனினும் இறுதியாக மார்க்கோ ஆர்னாடோவிச் மீண்டும் ஒரு கோலைப் போட்டு போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவடையச் செய்தார்.

மேலதிக போட்டி விபரங்கள்:

  • உருகுவே 3-0 வெனிசுவெலா
  • ஈக்வடோர் 3-0 சிலி
  • கொலம்பியா 1-0 பராகுவே
  • அல்பேனியா 2-0 லீசெஸ்டீன்
  • இஸ்ரேல் 2-1 மசிடோனியா
  • குரோஷியா 3-0 கொசோவோ
  • உக்ரைன் 2-2 துருக்கி
  • பின்லாந்து 2-3 ஐஸ்லாந்து
  • செர்பியா 3-0 மோல்டோவா
  • அயர்லாந்து 1-0 ஜோர்ஜியா