உலக நீச்சல் தினம் சர்வதேச ரீதியில் இன்று (23.10.2021) கொண்டாடப்படும் நிலையில், மட்டக்களப்பிலும் உலக நீச்சல் தினம் கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக நீச்சல் தினத்தினை முன்னிட்டு ஒரு மைல் தூரம் கடலை நீந்திக் கடக்கும் நிகழ்வு இன்று (23) காலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.
கொரோனா அச்சுறுத்தலால் வீழ்ந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையினை எழுச்சி பெற வைக்கும் நோக்குடனும் சுற்றுலா பயணிகளை கவரவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உளவளத்தினை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கு கல்லூரி அமைத்து நீச்சல் பயிற்சிகளை வழங்கி வரும் கல்லூரியான மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் (Swim Batti Swimming Academy) மாணவர்களாகிய இருதயநாதன் கெல்வின் கிஷோ (வயது 20) புளோரிங்டன் டயன்ஸ்ரித் (வயது 17), நவேந்திரன் லிருக்ஷன் (வயது 16), சாந்தகுமார் அரிமாதுங்கன் (வயது 16), புளோரிங்டன் டயன்ஸ்ரைன் (வயது 15) மற்றும் புளோரிங்டன் டயன் பிறிடோ (வயது 13) ஆகிய ஆறு மாணவர்கள் கலந்து கொண்டு கடலை ஒரு மைல் தூரம் நீந்திக் கடந்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்டச் செயலக நீச்சல் பயிற்றுவிப்பாளருமான தங்கதுரை சோமஸ்காந்தன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன், விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதேநேரம் இலங்கையின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் நீச்சல் தொடர்பான அறிவினை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்டச் செயலக நீச்சல் பயிற்றுவிப்பாளருமான தங்கதுரை சோமஸ்காந்தன் தெரிவித்தார்.
மறுமுனையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர் யுவதிகளிடையே குறைந்து போயிருக்கும் உடல் ஆரோக்கியத்தை பேணும் செயற்பாடுகளுக்கு மத்தியில் இவ்வாறான நிகழ்வுகள் அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்ய உதவிய அனைவருக்கும் மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
<<மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு>>