தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஜோன் வோட்கின்ஸ் (John Watkins) கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். டர்பனில் வசித்து வந்த அவர் இறக்கும் போது 98 வயதாகும்.
உலகில் வாழ்ந்து வந்த மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக விளங்கிய ஜோன் வோட்கின்ஸ், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, சிறிது காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடியாக துடுப்பாடுகின்ற மத்திய வரிசை வலதுகை துடுப்பாட்ட வீரராகவும், வேகப் பந்துவீச்சாளராகவும் விளங்கிய அவர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1949இல் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக ஜொஹனஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
தென்னாபிரிக்க அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று அரைச் சதங்களுடன் 612 ஓட்டங்களையும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அவர் 1957இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
இதனிடையே, அவர் 1953-53 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 408 ஓட்டங்கள் எடுத்து தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…