கென்னியாவின் நைரோபி நகரில் இடம்பெற்றுவரும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இலங்கை வீரர்கள் சிறந்த முயற்சியை மேற்கொண்டாலும், பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.
உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் செவ்வாய்க்கிழமை கென்னியாவின் நைரோபி நகரில் உள்ள நயயோ விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. இந்த நிலையில் இன்றைய முதல் நாளில் (18) இலங்கை வீரர்கள் சிலர் தமது போட்டிகளில் பங்கேற்றனர்.
உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 இலங்கை வீரர்கள்!
இதில், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்ட தகுதிச் சுற்றில் இலங்கை வீரர்கள் சிறந்த திறமையினை வெளிப்படுத்தியதன் மூலம் 3 நிமிடங்கள் 26.62 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து ஐந்தாவது இடத்தைப் பெற்றனர். எனினும், நேரக் கணிப்பீட்டின்படி இலங்கை அணி இறுதிப் போட்டிக்காக தெரிவாகியது.
இன்னிலையில், இன்று இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் ஏழாவது இடத்தினையே பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. இலங்கை வீர வீராங்கனைகள் இந்தப் போட்டித் தூரத்தை 3 நிமிடங்கள் 26.39 செக்கன்களில் நிறைவு செய்தனர்.
இலங்கை சார்பாக குறித்த அஞ்சலோட்ட அணியில் இசுரு கௌஷல்ய, கருனாரத்ன, ஜயசுந்தர மற்றும் சயுரி லக்மாலி ஆகிய வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, இன்று இடம்பெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு வீராங்கனையாக இருந்த மெதானி ஜயமான்ன போட்டித் தூரத்தை 11.96 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
முன்னர் இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் போட்டித் தூரத்தை 12.01 செக்கன்களில் நிறைவு செய்த மெதானி ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். எனினும், நேரப் பதிவுக்கு அமைய அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, இலங்கையின் மற்றொரு வீரரான இசுரு அபேவர்தன, ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதிச் சுற்றில் போட்டித் தூரத்தை 48.02 செக்கன்களில் நிறைவு செய்து ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனவே, அவருக்கு அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளை படிக்க <<