உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் இளம் வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே போட்டியில் அனைவரது மனதையும் கவர்ந்திருந்தார்.
குறித்த போட்டியில் இலங்கை அணி வெறும் 3 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருந்த போது களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ, மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை பெற்றிருந்தார்.
யோக்கர் பந்துவீச்சில் மாலிங்கவின் சாதனை
சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் ………..
முதல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எவ்வித அச்சமும் இன்றி, இங்கிலாந்து அணியில் 150 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பந்துவீசும் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் ஆகியோருக்கு எதிராக அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடிய விதம், அனைவரையும் வியக்க வைத்தது. அதில், ஜொப்ரா ஆர்ச்சருக்கு விளாசிய இரண்டு சிக்ஸர்களும் அவிஷ்கவின் துடுப்பாட்டத்தின் திறமைக்கு மிகப் பெரிய உதாரணமாக இருந்தது.
இவ்வாறு இலங்கை அணியை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றிய அவிஷ்க பெர்னாண்டோ 49 ஓட்டங்களை பெற்றிருந்த போது, துரதிஷ்டவசமாக மார்க் வூட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் இவ்வாறு துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்திருந்த நிலையில், தன்னுடைய முதல் உலகக் கிண்ண அரைச் சதத்தையும் தவறவிட்டிருந்தார்.
அரைச்சதத்தை தவறவிட்ட அவிஷ்க பெர்னாண்டோ ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரின் துடுப்பாட்டத்தை பாராட்டியிருந்த லசித் மாலிங்க, அவிஷ்க பெர்னாண்டோ கற்றுக்கொள்ள வேண்டிய சில விடயங்களை எமது Thepapare.com இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
“அவிஷ்க பெர்னாண்டோ முதல் போட்டிக்கு பின்னர் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வயதில் தேசிய அணியில் விளையாடும் போது, பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக எந்த மாதிரியான திட்டங்களை வகுக்கின்றார்கள் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவிஷ்க சிறப்பாக துடுப்பெடுத்தாடும் போது, இங்கிலாந்து அணி அவருக்கு எதிராக திட்டமொன்றை வகுத்திருந்தது. குறிப்பாக, ஸ்குயார் லெக் (Square Leg) பகுதியில் இருந்த களத்தடுப்பு வீரரை தேர்ட் மேன் (Third Man) பகுதியில் வைத்து முதலில் வேகம் குறைந்த பந்து ஒன்றினை வீசினர். பின்னர், பௌன்சர் பந்து ஒன்றினை வீச, அவிஷ்க தேர்ட் மேன் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட ஆதில் ரஷிதிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
குறித்த செயற்பாடானது எதிரணி துடுப்பாட்ட வீரருக்கு எதிராக தீட்டும் திட்டமாகும். அதனை அவிஷ்க போன்ற இளம் வீரர், எதிரணியினர் ஏன் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அடுத்து என்ன பந்து வரப்போகிறது என்பதை கணிக்க வேண்டும். இதுபோன்ற விடயங்களை அவிஷ்க விரைவாக கற்றுக்கொண்டால், அவரது திறமையின் மூலம் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும்” என்றார்.
இலங்கை அணி தங்களுடைய உலகக் கிண்ணப் பயணத்தில் அரையிறுதியை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அவிஷ்க பெர்னாண்டோ இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவ்வாறான நிலையில், அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ தனது பங்கினை அணிக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டி நாளை (28) டர்ஹாமில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<