ஐசிசி உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதிவரை நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
>> மோசமான சாதனையை தன்வசப்படுத்திய சூர்யகுமார் யாதவ்!
இந்நிலையில் உலகக்கிண்ணத்தொடரானது ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதிவரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் 10 அணிகள் மோதவுள்ள இந்த தொடரானது இந்தியாவின் 12 மைதானங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நரேந்திரமோடி மைதானத்தை தவிர்த்து பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹ்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோவ், இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தமாக 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகக்கிண்ணம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இரண்டு முக்கிய காரணங்களால் வெளியாகாமல் உள்ளன. பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா மற்றும் தொடருக்கான இந்திய அரசாங்கத்தின் வரி தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<