FIFA உலகக் கிண்ணம் 2022; ஒரே குழுவில் முன்னாள் உலக சம்பியன்கள்

388

கட்டாரில் இவ்வருடம் இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கான குழுக்கள் தெரிவு வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது. இக்குழுக்கலில் ஒவ்வொரு கண்டங்களிலும் கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்ற தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இடம்பெற்றன.

மொத்தம் 32 நாடுகளின் பங்கேற்புடன் 4 வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இப்பெரும் திருவிழா, இவ்வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகும்.  இந்த 32 அணிகளும் முறையே A முதல் H வரையில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

போட்டியை நடத்தும் நாடான கட்டார், குழு A இல், ஈகுவடோர், செனகல் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளதுடன், நடப்பு சம்பியன்களான பிரான்ஸ் அணி குழு D இல்,  டென்மார்க் மற்றும் டுனிசியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.  இந்த குழுவில் நான்காவது அணியாக, நடைபெற்றவுள்ள  மற்றைய தகுதிகாண் போட்டிளின் நிறைவில் பெரு அல்லது அவுஸ்திரேலியா அல்லது ஐக்கிய அரபு இராச்சியம் அணி இணைந்துகொள்ளும்.

இதில் குழு F இல் இடம்பெற்றுள்ள கனடா, 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் தடவையாக உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இத்தொடரின் குழு C இல் அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் ஒன்றாக இடம்பெற்றுள்ளன. தற்போது கால்பந்து அரங்கில் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வரும் ரொபேர்ட் லெவன்டொஸ்கியும், லியோனல் மெஸ்ஸியும் முறையே போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போட்டி மிக விறுவிறுப்பான குழு நிலை போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து குழு D இல், 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றியாளர்களான ஸ்பெய்ன் அணியும் 2014 உலகக்கிண்ண வெற்றியாளர்களான ஜெர்மனி அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தடவுள்ளன.

அத்தோடு கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் போர்த்துக்கல் அணியானது குழு H இல் இடம்பிடித்துள்ளது.

தற்போது கால்பந்து ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் இறுதி உலகக்கிண்ண தொடராக இது பார்க்கப்படுகிறது. 2006இலிருந்து உலகக்கிண்ண தொடர்களில் விளையாடும் இவர்கள் இம்முறை தங்கள் அணிகளுக்கு கிண்ணத்தை வென்று கொடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும் நடப்பு ஐரோப்பிய சம்பியன்களான இத்தாலி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறாமல் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குழுக்கள் விபரம்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<