யூரோ கிண்ணக் கால்பந்து தொடரில் 3ஆவது காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் FIFA கால்பந்தாட்ட கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதின.

இப்போட்டியில் ஜெர்மனி பெனால்டி முறையில் 6-5 என்ற கோல்கள் கணக்கில் இத்தாலியை  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல்களைப் போட முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் போட்டி 0-0 என்ற நிலையில் இருந்தது.

2ஆவது பாதி ஆட்டம் தொடர்ந்தது. முதல் பாதி போன்றே இரண்டு அணி வீரர்களும் கோல் ஒன்றைப் போடும் முயற்சியில் விளையாடினர். அந்த முயற்சியின் பலன் ஜெர்மனிக்கு பழிக்க அந்த அணியின் ஒசீல் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ஜெர்மனி  அணி சார்பாக முதல் கோலைப் போட்டார். அவர் கோல் போட்டு 12 நிமிடங்கள் செல்ல இத்தாலி அணியின் முயற்சியும் வீணாகமல் செல்ல போட்டியின் 77ஆவது நிமிடத்தில் பௌஞ்சி இத்தாலி அணி சார்பாக முதல் கோலைப் போட்டார்.  இதன் பின் போட்டியின் முழு நேர முடிவு வரை இரு அணிகளும் வெற்றி கோலைப் போட முயன்றாலும் முயற்சி பயனளிக்கவில்லை. இதன் பின் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இதனால் பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் ஜெர்மனி அணி 6-5 என்ற  கோல்கள்  கணக்கில் இத்தாலியை  வீழ்த்தி 2016ஆம் ஆண்டு யூரோ கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்