கொரோனாவுக்கு பிந்திய ஐரோப்பிய கால்பந்து

212

உலகெங்கும் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளும் தடைப்பட்டுள்ளன. மைதானங்களில் இப்போது ஈ, காக்காயும் இல்லை. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் எல்லோருமே வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். 

கொரோனா வைரஸ் கொண்டுவந்திருக்கும் சமூக விலகல் (Social Distancing) கோட்பாட்டால் ஒருவருக்கு ஒருவர் இரண்டு மூன்றடி எட்டி நின்றே உறவாட வேண்டி இருக்கிறது. இது விளையாட்டுக்கு சரிப்படாது. அதிலும் கால்பந்துப் போட்டிகளுக்கு ஒத்துப்போகவே முடியாது.

ஒரு வாரத்திற்கு முன் மெல்ல மெல்ல நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டிகள் இன்றாகும்போது கிட்டத்தட்ட முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டன. கிராமங்கள், பாடசாலைகளில் நடைபெறும் கால்பந்து போட்டி தொடக்கம் சார்வதேச கால்பந்து போட்டிகள் வரை இதே நிலை தான்

மரணத்தை வென்று சிகரம் தொட்ட வான் டைக்

வெர்ஜில் வான் டைக் எட்டு ஆண்டுகளுக்கு………………….

எம்மைப் பொறுத்தவரை கால்பந்துப் போட்டிகள் என்பது அன்றாட பொழுதுபோக்கு அம்சம். எம்மைச் சார்ந்த அல்லது நாம் ஆதரிக்கும் அணி வென்று விட்டால் ஒரு சில மணி நேரம் கொண்டாடுவோம், தோற்றுவிட்டால் கவலைப்படுவோம், அத்தோடு எமது இலாப நஷ்டங்கள் முடிந்துவிடும்.

ஆனால், விளையாட்டு என்பது இதனைத் தாண்டியும் பெரிய வலையமைப்பு. புரியும்படி சொல்லப்போனால் மிகப் பெரிய வியாபாரம். எனவே நாம் தொலைக்காட்சியிலும், 100, 500 ரூபாவுக்கு டிக்கெட் வாங்கி மைதானத்திலும் பார்க்கும் சமாச்சாரத்துக்கு அப்பால் சூட்சுமம் நிறைந்தது.

இனி கூற வந்த விடயத்திற்கு வருவோம். கொரோனா வைரஸ் தொற்றினால் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்யானோ ரொனால்டோ உட்பட உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கால்பந்து வீரர்களும் ஊதிய வெட்டு அல்லது வருவாய் இழப்புக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளனர். அதாவது, கால்பந்து போட்டிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் உலகின் மிகப்பெரிய கால்பந்து கழகங்கள் பெரும் வருவாயை இழந்து வருகின்றன. இதனால் அந்தக் கழகங்கள் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதில் திண்டாடி வருகின்றன

உலகில் அதிக வருவாய் ஈட்டும் ஐரோப்பாவின் 12 கழகங்களில் குறைந்தது 10 கழகங்கள் தமது அணியில் இருக்கும் பல மில்லியன் யூரோ சம்பளம் பெறும் வீரர்களின் சம்பளத்தை குறைக்க ஆலோசித்து வருவதாக இது தொடர்புடைய பல தரப்புகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஐரோப்பாவில் நிதி நிலையில் வலுவான அணிகள் கூட இந்த உலகளாவிய தொற்று நோயினால் போட்டிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பெரும் நிதி நெருக்கடிக்கு முகம்கொடுக்க ஆரம்பிதுள்ளன. போட்டிகள் ஓத்திவைக்கப்படுவது என்பது அந்த போட்டிகளால் அல்லது ஒளிபரப்பினால் வர வேண்டிய வருவாய் வரவில்லை என்று அர்த்தமாகும்.  

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

நெதர்லாந்து முன்னணி கால்பந்து………………..

இந்தத் தடங்கல் குறைந்தபட்சம் வரும் மே மாதம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகம் கண்டு தீவிரம் அடைந்து வரும் சூழலில் அது மேலும் பல வாரங்களுக்கு தடைப்பட அதிக வாய்ப்பு உண்டு.  

இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய முன்னணி ஐந்து ஐரோப்பிய லீக்குகளினதும் ஊதியம் மாத்திரம் 9 பில்லியன் யூரோ தேறும். இது அனைத்துக் கழகங்களினதும் வருவாயில் 62 வீதமாகும்.

கழகங்களில் ஊதிய வெட்டு 

உலகில் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து கழகமாக உள்ள ஸ்பெயினின் பார்சிலோனா தமது அணியில் இருக்கும் வீரர்களுக்கு தற்காலிக ஊதிய வெட்டை மேற்கொள்ளும் அறிவிப்பை இந்த வாரம் வெளியிட்டது. இதில் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் லுவிஸ் சுகாரெசும் அடங்கும்.

எனினும், இது தொடர்பில் பார்சிலோன குழாத்தின் ஒரு பகுதியினர் இடையே சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிறைவேற்று குழு சந்திப்பில் இந்த வைரஸில் இருந்து அணியை மீட்டெடுப்பது எப்படி என்று தீவிரமாக பேசினார்கள்

என்றாலும் இந்த சம்பள வெட்டுக்கு அதிக தொகை ஈட்டும் சில வீரர்கள் உட்பட அணிக்குள் ஒரு குழு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் மற்றொரு குழு இதற்கு ஆதரவளிப்பதாக தெரியவருகிறது. இவர்களில் மெஸ்ஸியும் இருப்பதாக அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன

எப்படி இருந்தபோதும் ஒவ்வொரு போட்டி தினத்திலும் டிக்கெட் விற்பனை, அணி ஜெர்சி விற்பனை என்று பார்சிலோனா ஈட்டும் பெரும் வருவாய் இன்று இல்லாமல்போயுள்ளது

ஜெர்மனியின் ப்ருசியா டொர்ட்முண்ட் அணி வீரர்கள் தமது ஊதியத்தில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்ய இணங்கியுள்ளனர். இதனால் வீரர்களுக்கான அந்த அணி செலவிட வேண்டி பல மில்லியன் டொலர் தொகை சேமிக்கப்படும். அதேபோன்று பயேர்ன் முனிச் வீரர்கள் தமது ஊதியத்தில் 20 வீதத்தை குறைப்பதற்கு இணங்கியுள்ளனர்

போர்த்துக்கலைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆடும் இத்தாலியின் ஜுவான்டஸ் கழகமும் வீரர்களின் ஊதியத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து பேசி இருப்பதாக அந்த அணி வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.    

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் நிர்வாகமும் அந்நாட்டு வீரர்களின் அமைப்பான தொழில்சார் கால்பந்து சம்மேளனத்துடன் இது பற்றி பேசி வருகிறது. வைரஸ் தொற்றினால் பல துறைகளும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த பேச்சுவார்த்தை அவசியமாக இருந்தது என்று அந்த சம்மேளனம் கூறியுள்ளது

இந்த நெருக்கடி நிலை குறித்து 20 ப்ரீமியர் லீக் கழகங்களும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. அப்போது வீரர்கள் ஊதியம் பற்றியும் பேசப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி

கால்பந்து உலகின் பெரும் நட்சத்திரங்களான…………………..

என்றாலும் மற்றைய செல்வந்த கழகங்களான ரியல் மெட்ரிட் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.  

இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் ஐந்து பிரதான கால்பந்து லீக்குகளும் இந்தப் பருவத்திற்கான ஏஞ்சிய போட்டிகளை பூர்த்தி செய்யாவிட்டால் ஒளிபரப்பு மற்றும் அனுசரணை வருவாய் என்று போட்டி தினத்திற்கான சுமார் 4 பில்லியன் யூரோக்களை இழக்கக் கூடும் என்று KPMG ஆலோசனை நிறுவனம் கணித்துள்ளது. இது ஒரு வறிய நாட்டின் ஆண்டு பட்ஜட்டை விட அதிகம்

மெஸ்ஸி, ரோனால்டோவுக்கு இழப்பு

உலகில் அதிக ஊதியம் பெறும் கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் பதிவாகி இருக்கிறார். பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி மெஸ்ஸியின் ஆண்டு வருவாய் 127 மில்லியன் டொலர்கள். பார்சிலோனா அணியுடன் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் மெஸ்ஸி செய்து கொண்ட ஒப்பந்த நீடிப்பே அவரது செல்வம் மேலோங்கக் காரணம்.  

ஊதியம், மேலதிக கொடுப்பனவு, ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்று பார்சிலோனாவில் வருவாயை அள்ளும் அவர் அனுசரணைகள் மூலமும் பெரும் தொகையை ஈட்டுகிறார்.

இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் ரொனால்டோ. அவர் ஈட்டும் மொத்த வருவாய் 109 மில்லியன் டொலர்கள். இதன்போது நைக்கி போன்ற பெரு நிறுவனங்களின் அனுசரணை மூலமும் அவர் வருவாய் ஈட்டுகிறார். 

என்றாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளிலேயே இந்த இரு நட்சத்திர வீரர்களும் விளையாடுகின்றனர்

தனது செயலுக்கான எதிர்வினையை ஏற்க தயார்: லூக்கா ஜோவிக்

ரியல் மெட்ரிட் கால்பந்து கழக வீரரான லூக்கா………………………

இத்தாலியின் மருத்துவக் கட்டமைப்பையே திணறடிக்கும் வகையில் அந்த நாட்டில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி இருப்பதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது

ஸ்பெயினின் நிலையும் இதுதான். அந்த நாட்டின் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்திற்கு அதிகம் என்பதோடு உயிரிழப்பு ஆறாயிரத்தை நெருங்கிவிட்டது

இத்தாலியின் முன்னணி கழகமான ஜுவான்டஸின் டனிலே ருகானி, பிளைஸ் மடுடி மற்றும் பவுலோ டிபாலா ஆகிய வீரர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் அந்த அணியின் நிதி நிலைமையும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது

எனவே, தமது ஊதியத்தில் இருந்து 3.8 மில்லியன் யூரோ வெட்டுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இணங்கி இருப்பதாக அந்த அணியின் தலைவர் ஜியோர்ஜியோ சிலினி குறிப்பிட்டுள்ளார். என்றாலும் இந்த ஊதிய குறைப்புக்கு அந்த அணியின் அனைத்து வீரர்களும் இன்னும் இணங்காத நிலையில் அது பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்காக ரொனால்டோ மற்றும் அவரது முகவர் ஜோர்க் மென்டெஸ் இணைந்து போர்த்துக்கல் மருத்துவமனைகளில் மூன்று அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்க ஒரு மில்லியன் யூரோவுக்கு அதிக தொகை நிதி உதவியை கடந்த வாரம் அளித்திருந்தனர்.  

மெஸ்ஸியும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்காக தனது சொந்த நாடான ஆர்ஜன்டீனா மற்றும் ஸ்பெயினுக்கு ஒரு மில்லியன் யூரோ நிதி உதவி அளித்திருக்கிறார்

இந்நிலையில் வீரர்களின் ஊதியத்தில் 70 வீத குறைப்பை செய்வதற்கு பார்சிலோனா எதிர்பார்க்கிறது. ஆனால் வீரர்கள் இந்த பருவத்தின் எஞ்சிய போட்டிகளில் 30 வீத குறைப்புக்கு முன்வந்துள்ளனர். எனவே இதில் தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது

அதாவது 70 வீத ஊதிய குறைப்பின் மூலம் 50 மில்லியன் டொலர்களை சேமிக்கலாம் என்று பார்சிலோனா எதிர்பார்க்கிறது. இது அந்த அணி சந்தித்த இழப்புகளை சரிசெய்ய போதுமானது

70 வீத ஊதிய குறைப்புக்கு மெஸ்ஸி உடன்படுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஊதியக் குறைப்புக்கு அவர் ஆதரவாக இருக்கும் சூழலில் அவரது மொத்த ஊதியத்தில் கணிசமான இழப்பு ஏற்படலாம். எப்படி இருந்தபோதும் உலகில் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து வீரர் என்ற சாதனையை அவரிடம் இருந்து பறிப்பது கடினமாகவே இருக்கும்.

மறுபுறம் ஊதியக் குறைப்புக் குறித்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பிரான்சின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அணியின் நட்சத்திர வீரரான பிரேசிலின் நெய்மார் உலகில் அதிக வருவாய் ஈட்டு கால்பந்து வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக…………………….

அவர் கடந்த ஆண்டு 105 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டினார். இதில் 75 மில்லியன் டொலர் ஊதியம் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு அடங்கும். ஆனால் ஊதியக் குறைப்பு ஒன்று ஏற்பட்டால் அது ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை விட நெய்மாரின் வருவாயில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.   

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடக்கம் ப்ரீமியர் லீக், லா லிகா என்று பணம் கொட்டும் போட்டித் தொடர்களின் எஞ்சிய ஆட்டங்களை தொடருவது எப்படி என்று தெரியாமல் எல்லோருமே திண்டாடுகிறார்கள். இது விளையாட்டு சம்பந்தமான பிரச்சினை மாத்திரமல்ல ஒரு பெரிய வர்த்தகத்தை கொண்டு செல்வது தொடர்பான பிரச்சினையும் கூட

எனவே, இது ஐரோப்பாவின் ஐந்து பிரதான கால்பந்து லீக்குகளின் எதிர்காலம் பற்றிய பிரச்சினை. குறிப்பாக நட்சத்திர வீரர்களின் ஊதியக் குறைப்புகள் எதிர்கால வீரர்கள் பரிமாற்றத்தில் பெரும் தாக்கம் செலுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் அதிக வருவாய் தேடி அங்குமிங்கும் தாவக் கூடும்.

எனவே, கொரோனா வைரஸுக்குப் பின்னரான கால்பந்து என்பது அதிரடி மாற்றங்களை கொண்டதாக இருக்கக் கூடும்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<