டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வருடம் நடைபெறவிருந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை 2022ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட…..
எனினும், உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன் உத்தியோகபூர்வாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், 18ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது.
தற்போது ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெற இருப்பதால் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை 2022ஆம் ஆண்டு நடத்தவதற்கு உலக மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் உலக மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம்.
கொரோனா வைரஸினால் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருவதால்…..
இதனால் மெய்வல்லுனர் வீரர்கள் உரிய காலத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவும், போட்டிக்கு தயாராகவும் உதவியாக அமையும். இத்தருணத்தில் அனைவரும் நெகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டும். இதனால் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க உள்ளோம்.
இதுஇவ்வாறிருக்க, 2022இல் இங்கிலாந்தின் பெர்மிங்ஹமில் பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஜேர்மனியின் மியூனிச்சில் ஐரோப்பிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் என்பன நடைபெறவுள்ளதால், அதன் ஏற்பாட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2022 செப்டெம்பர் மாதம் சீனாவின் ஹென்சூவோ நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<