பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியை 36 ஓட்டங்களால் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றிய இந்த இளையோர் முத்தரப்பு T20 தொடர் கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி, பாகிஸ்தானுடனான இரண்டாவது போட்டி மோசமான காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. மேலும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஒரு ஓட்டத்தினால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
எவ்வாறாயினும், பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது போட்டியில் இலங்கை அணி; வெற்றியீட்டியதால், முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. மறுபுறத்தில் இந்த தொடரை நடத்திய வரவேற்பு நாடான பங்களாதேஷ் அணி தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
- மகளிர் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தமாகியுள்ள சமரி அத்தபத்து
- ஐசிசியின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த T20I அணியின் தலைவியாகிய சமரி அதபத்து
இதன்படி, பங்களாதேஷின் ஷெய்க் கமால் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (02) நடைபெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நெத்மி சேனாரத்ன 8 பௌண்டரிகளுடன் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், தெவ்மி விஹங்கா 42 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஜன்னதுல் மவ்வா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ராபியா கான் 29 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், ரஸ்மிகா செவ்வன்தி 3 விக்கெட்டுகளையும், ரிஸ்மி சன்ஜனா மற்றும் யசன்தி நிமன்திகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை 19 வயதின் மகளிர் அணி சர்வதேச கிரிக்கெட் தொடரொன்றை வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கை வீராங்கனை தெவ்மி விஹங்கா இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகியாகவும், பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணியின் ராபியா கான் தொடர் நாயகியாகவும் தெரிவானார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<