தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை

India Tour of Sri Lanka 2024

136
Women's T20 Asia Cup 2024 Sri Lanka vs Thailand

தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.  

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில நேற்று (24) நடைபெற்ற B குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தாய்லாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது. 

அந்த அணியின் நன்னாபட் கொஞ்சாரோஎன்கை மாத்திரம் ஓரளவு தாக்குப் பிடித்து 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். 

பந்துவீச்சில் கவீஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து, 94 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. 

அணித்தலைவி சமரி அத்தப்பத்து 35 பந்துகளில் 2 பௌண்டறிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும், விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 

இந்த வெற்றியுடன் B குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற இலங்கை, நாளை (26) இரவு நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதியில் நடப்புச் சம்பியன் இந்தியா, பங்களாதேஷை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இந்தப் போட்டியில் ஆட்டநாயகி விருதை இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து தட்டிச் சென்றார். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<