பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான மகளிருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
உதேஷிக்கா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் அபார பந்துவீச்சுகளும், இளம் வீராங்கனை விஷ்மி குணரட்னவின் அரைச் சதமும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
எட்டு அணிகள் பங்குபற்றுகின்ற 9ஆவது மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று ஆரம்பமாகியது.
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இத்தொடரில் இன்று (20) இரவு நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைச் சேர்த்தது.
அந்த அணி சார்பில் நிகர் சுல்தானா 48 ஓட்டங்களையும், ஷொர்னா அக்தர் அதிரடியாக விளையாடி 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் இனோஷி ப்ரியதர்ஷனி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், உதேஷிக்கா ப்ரபோதனி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- தம்புள்ளையில் ஆரம்பமாகும் மகளிர் ஆசியக்கிண்ணம்!
- மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!
- LPL தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ள சமரி அதபத்து!
இதனையடுத்து 112 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன மற்றும் அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமரி அத்தபத்து 12 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் விஷ்மியுடன் இனைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமவும் அதிரடியாக விளையாட அணியின் ஓட்ட எண்ணிக்கையும் உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய விஷ்மி குணரட்ன தனது 3ஆவது T20i அரைச் சதத்தைப் பதிவுசெய்து 7 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் என 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்ஷிதா சமரவிக்ரமவும் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கவிஷஷா டில்ஹாரி 12 ஓட்டங்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 17.1 ஓவர்களில் வெற்றியிலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி நடப்பு மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகி விருதை இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன தட்டிச் சென்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<