இலங்கையிடம் படுதோல்வியடைந்த தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி

2095
Women's T20 Asia Cup - Sri Lanka v Thailand

சிறப்பான பந்து வீச்சின்  துணையுடன் ஆசிய கிண்ண T-20 சம்பியன்ஷிப்  தொடரின் இன்றைய போட்டியில் தாய்லாந்து மகளிர் அணியை 75 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி தனது வெற்றியோட்டத்தினை தொடர்துகொண்டு செல்கின்றது.

இன்று பெங்கொக் நகரில் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி ஹாசினி பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி,  அணித்தலைவி ஹாசினி பெரேராவும், சாமரி அத்தபத்துவும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளாக களமிறங்கி இலங்கை மகளிர் அணிக்கு இத்தொடரின் சிறப்பான ஆரம்பத்தினை இன்றைய போட்டியில் வழங்கியிருந்தனர். முதல் விக்கெட்டாக சாமரி அத்தபத்து இலங்கை மகளிர் அணி 77 ஓட்டங்களை பெற்றிருந்த போது சேன்யாவின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார். ஆட்டமிழக்கும் போது சாமரி அத்தபத்து 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர், இலங்கை அணித்தலைவி ஹாசினி பெரேராவின் கன்னி அரைச்சதத்துடன் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஹாசினி பெரேரா 59 பந்துகளிற்கு முகம்கொடுத்து 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக 55 ஓட்டங்களை பெற்று தனது சிறந்த T-20 துடுப்பாட்டத்தினை பதிவு செய்துகொண்டார்.

பந்து வீச்சில், தாய்லாந்து மகளிர் அணி சார்பாக சைனம்மின் சான்யா  26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, ஓரளவு சவாலான வெற்றி இலக்கான 121 ஓட்டங்களை பெற சொர்னாரின் டிப்போச் தலைமையில் களமிறங்கிய  தாய்லாந்து மகளிர் அணி முதலாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டினையும், இரண்டாவது விக்கெட்டினையும் அடுத்தடுத்த பந்துகளில் உதேசிகா பிரபோதினியின் வேகத்தினை தாக்குப்பிடிக்காமல் பறிகொடுத்தது.

இதனால், ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தினை எதிர்கொண்ட தாய்லாந்து மகளிர் அணி, பின்னரும் இலங்கையின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுக்களை இழந்தும் குறைந்த ஓட்ட வேகத்தில் ஓட்டங்களை சேர்த்துக்கொண்டும் இருந்தது.

இறுதியில் அவ்வணி 20 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மேலதிக 75 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணியிடம் படுதோல்வியைடந்தது.

துடுப்பாட்டத்தில், ஏனைய வீராங்கனைகள் யாவரும் ஓரு இலக்க ஓட்ட எண்ணிக்கையை பெற்ற வேளையில், சனிதா சுத்திருஅங் மாத்திரம் அதிகபட்சமாக 12 ஓட்டங்களை தாய்லாந்து மகளிர் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பாக இனோகா ரணவீர 4 ஓவர்களை வீசி 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, தனது வேகப்பந்து வீச்சு மூலம் முன்னர் மிரட்டிய உதேசிகா பிரபோதினியும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இவர்களை தவிர, சாமரி அத்தபத்து, ஒசாதி ரணசிங்க, சுஹந்திக்க குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இப்போட்டியில் வெற்றிபெற்றிருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது இடத்திலேயே இலங்கை மகளிர் அணி நீடிக்கின்றது. இலங்கை மகளிர் அணி இத்தொடரில் முன்னேற்றம் அடைய எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை அணி ஆசிய கிண்ண T-20 சம்பியன்ஷிப் தொடரில், அடுத்த போட்டியாக இந்தியா மகளிர் அணியுடன் நாளை மோதுகின்றது.

போட்டி சுருக்கம்,

இலங்கை மகளிர் அணி: 120/6(20) – ஹாசினி பெரேரா 55(59),  சாமரி அத்தபத்து 31(36), சைனம்மின் சேன்யா 26/3(4)

தாய்லாந்த் மகளிர் அணி: 45/9(20), சனிதா சுத்திருஅங்  12(10), இனோகா ரணவீர 4/3(4), உதேசிகா பிரபோதினி 8/3(4)

போட்டி முடிவு: இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்களால் வெற்றி