ஆசிய கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை மகளிர் அணிகளிற்கு இடையிலான போட்டியில், 7 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும் தமது அணி வெற்றி பெற்ற போட்டிகள் போதாமையினால் இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகாமல் தொடரிலிருந்து துரதிஷ்டவசமாக வெளியேறுகின்றது.
இன்று பெங்கொக் நகரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி ஹாசினி பெரேரா முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் சஞ்சிதா இஸ்லாம், சமீனா சுல்தானா ஆகியோர் ஒரு நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர். எனினும், சமீமா சுல்தானா சாமரி அத்தபத்துவின் பந்தில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, அவ்வணி மெதுவாக ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தது.
இதனையடுத்து, சஞ்சிதா இஸ்லாம் மற்றும் புதிதாக வந்த வீராங்கனையான சாய்லா சர்மின் ஆகியோரின் ஒரளவு நிதானமான இணைப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில், 3 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றது.
துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்த சஞ்சிதா இஸ்லாம் அதிகபட்சமாக 35 ஓட்டங்களையும், சாய்லா சர்மின் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பங்களாதேஷ் மகளிர் அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில், இலங்கை மகளிர் அணி சார்பாக சாமரி அத்தபத்து 2 விக்கெட்டுக்களையும், சிரிபால வீரக்கொடி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர், இலகுவான வெற்றி இலக்கான 94 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 19 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை நிப்புனி ஹன்சிக்காவின் விக்கெட்டை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இதனை சுதாகரித்துக்கொண்ட சாமரி அத்தபத்து மற்றும் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை யசோதா மென்டிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை நெருங்க ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கினர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர். இருவரும் இலங்கை அணி 77 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அண்மித்திருந்த வேளையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றனர்.
இதனால் மீண்டும் இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. இருப்பினும், ஹாசினி பெரேரா மற்றும் டிலானி மனோதரா ஆகியோரின் போராட்டத்தினால் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 97 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகளினால் இலங்கை மகளிர் அணி வெற்றியிலக்கினை அடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஏற்கனவே விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்ட சாமரி அத்தபத்து 35 ஓட்டங்களை பெற்று தனது நல்ல சகலதுறை ஆட்டத்தினை வெளிக்காட்டினார்.
பந்து வீச்சில், இறுதிக்கட்டத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த ருமானா அஹமட் 2 விக்கெட்டுக்களை பங்களாதேஷ் அணி சார்பாக கைப்பற்றினார்.
இத்தொடரில், இலங்கை மகளிர் அணி பெரிதாக சாதிக்கவில்லை. எனினும் நேபாள அணியுடனான போட்டியில் எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்குள் மடக்கிய அணியாக (23 ஓட்டம்) உலக சாதனையை நிலைநாட்டியது. அதேபோன்று தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்தது இரசிகர்கள் மத்தியில் இலங்கை மகளிர் அணி குறித்த புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இவ்வாசிய கிண்ண T20 சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
போட்டி முடிவு – இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி