இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான மீள் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
9ஆவது மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை T20 போட்டிகள் கொண்ட தொடராக இலங்கையில் நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்குபற்றவுள்ள இம்முறை போட்டித் தொடரில் A குழுவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், B குழுவில் இலங்கை, பங்காளதேஷ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதன்படி, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 28ஆம் திகதி நடைபெறுகிறது.
இம்முறை போட்டிகள் அனைத்தும் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் நாளான ஜுலை 19ஆம் திகதி 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் ஐக்;கிய அரபு இராச்சியம் மகளிர் அணி நேபாளத்தையும், நடப்புச் சம்பியன் இந்திய அணி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.
அதேபோல, போட்டித் தொடரை நடாத்தும் வரவேற்பு நாடான இலங்கை மகளிர் அணி, தனது முதல் போட்டியில் (ஜூலை 20, இரவு 7:00 மணி), பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்து ஜலை 22ஆம் திகதி மலேசியாவையும், ஜுலை 24ஆம் திகதி தாய்லாந்தையும் சந்திக்கவுள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள 8 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, 7இல் சம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல, இலங்கை அணியும் 5 தடவைகள் இறுதிப்போட்டி வரை சென்று 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- ஜுலை 19 – ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் நேபாளம்
- இந்தியா எதிர் பாகிஸ்தான்
- ஜுலை 20 – மலேசியா எதிர் தாய்லாந்து
- இலங்கை எதிர் பங்களாதேஷ்
- ஜுலை 21 – இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
- பாகிஸ்தான் எதிர் நேபாளம்
- ஜுலை 22 – இலங்கை எதிர் மலேசியா
- பங்களாதேஷ் எதிர் தாய்லாந்து
- ஜுலை 23 – பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
- இந்தியா எதிர் நேபாளம்
- ஜுலை 24 – பங்களாதேஷ் எதிர் மலேசியா
- இலங்கை எதிர் தாய்லாந்து
- ஜுலை 26 – அரையிறுதிப் போட்டிகள்
- ஜுலை 28 – இறுதிப்போட்டி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<