சமரியின் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

Women’s T20 Asia Cup 2024

68

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி முன்னேறி அசத்தியுள்ளது. 

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறுவித்தது 

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்த நிலையில் குல் பெரொஸா 25 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலியும் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் 

அதன்பின் களமிறங்கிய சித்ரா ஆமின் 10 ஓட்டங்களிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த அணித்தலைவி நிதா தார் 2 பௌண்டறிகள், ஒரு சிக்ஸர் என 23 ஓட்டங்கள் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர் 

பின்னர் இணைந்த ஆலியா ரியாஸ்பாத்திமா சானா ஜோடி பொறுப்புடன் விளையாடியதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆலியா ரியாஸ் 16 ஓட்டங்களையும், பாத்திமா சானா 23 ஓட்டங்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைச் சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து 141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன மற்றும் அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்பம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரட்ன ஓட்டங்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம 12 ஓட்டங்களுக்கும், கவிஷா டில்ஹாரி 17 ஓட்டங்களுக்கும், நிலாக்ஷி டி சில்வா ஓட்டங்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனால் அணித்தலைவி சமரி அத்தபத்து அதிரடியாக விளையாடியதுடன், அரைச் சதம் கடந்தும் அசத்தினார். டி20 போட்டிகளில் அவரது 11ஆவது அரைச் சதம் இதுவாகும். எனினும், 9 பௌண்டறிகள், ஒரு சிக்ஸர் என 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சமரி விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஹசினி பெரேரா 3 ஓட்டங்களுடனும், சுகந்திகா குமாரி 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஷ்கா சஞ்சீவனி 24 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் 

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

இந்தப் போட்டியில் ஆட்டநாயகி விருதை இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து தட்டிச் சென்றார் 

இந்த நிலையில், நாளை (28) நடைபெறும் 9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<