மகளிருக்கான ஆசியக்கிண்ணத் தொடர் இம்மாதம் 19ம் திகதி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
>>தலைவர் பதவியினை இராஜினமா செய்த வனிந்து ஹஸரங்க
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் போன்ற அணிகள் குழு Aஇல் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற அணிகள் குழு Bஇல் இடம்பெற்றுள்ளன. எனவே தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுடன் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதவுள்ளதுடன், முதல் நாளின் இரண்டாவது போட்டியில் (இரவு 07.00 மணிக்கு) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் 20ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசியக்கிண்ணப் போட்டிகள் அனைத்தையும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று ரசிகர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<