மகளிர் டி-20 போட்டியில் மேல் மாகணம், வட மத்திய மாகாணங்கள் வெற்றி

2500
Western and North Central Province secure wins in Women’s Provincial T20

இன்று கொழும்பு கொல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற மகாணங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகளில் மேல் மாகாண மகளிர் அணியும், வட மத்திய மாகாண அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்குகொள்ளும் மாகாணங்களுக்கு இடையிலான டி-20 சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று (ஓக்டோபர் 5ஆம் திகதி) ஆரம்பமாகியது. இந்த சுற்றுப் போட்டியில் மத்திய மாகணம், வட மத்திய மாகணம், மேல் மாகணம் மற்றும் தென் மாகணம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு அணிகள் பங்குகொள்கின்றன. ஓக்டோபர் 5ஆம் திகதி முதல் ஓக்டோபர் 9ஆம் திகதி வரை நடக்கும் இந்த போட்டிகள் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழக மைதானம் என்பவற்றில் இடம்பெறும்.

மேல் மாகாண மகளிர் அணி எதிர் தென் மாகாண மகளிர் அணி

இன்று காலை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த சுற்றின் முதலாவது போட்டியில் மேல் மாகாண மகளிர் அணியும் தென் மாகாண மகளிர் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண அணியின் தலைவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பாடிய மேல்மாகாண மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. அதிக பட்சமாக மேல் மாகாண அணியின் நிபுணி ஹன்சிக்கா 26 ஓட்டங்களை பெற்றார். தென் மாகாண அணியின் சந்திம குணரத்தன 18 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன் பின்னர், இலகுவான வெற்றி இலக்கொன்றை நோக்கி துடுப்பெடுத்தாட தொடங்கிய தென் மாகாண மகளிர் அணி, மேல் மாகாண மகளிர் அணியின் சாதுர்யமான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. தென் மாகாண அணி சார்பாக அதிகபட்சமாக அரோஸ் பெரேரா 22 ஓட்டங்களை பெற்றார். மேல் மாகாண அணியின் சிறந்த பந்து வீச்சுப் பதிவாக சச்சினி செவ்வந்தி 17 ஓட்டங்களிற்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

*ஸ்கோர் விபரம்:

மேல் மாகாணம்: 103/8(20) – நிபுனி ஹன்சிக்கா 26, ஹர்சித மாதவி 24, சந்திம குணரத்ன 18/2

தென் மாகாணம்: 94/6 (20) – அரோஸ் பெரேரா 22, அனுஷ்கா ஜயவீர 16, சச்சினி செவ்வந்தி 17/1

போட்டி முடிவு – மேல் மாகாண மகளிர் அணி 9 ஓட்டங்களால் வெற்றி

……………………………………..

வட மத்திய மாகாண மகளிர் அணி எதிர் மத்திய மாகாண மகளிர் அணி

அதே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் வட மத்திய மாகாண மகளிர் அணி, மத்திய மாகாண மகளிர் அணியை எதிர்த்து ஆடியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மத்திய மாகாண அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வட மத்திய மாகாண அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் வட மத்திய மாகாண அணியை சேர்ந்த அமா காஞ்சனா  சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும் டிலானி மனோகரா 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய மாகாண மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது. இதில் மத்திய மாகாண அணியின் பிரசாதினி வீரக்கொடி அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் வட மத்திய மாகாண அணியின் இனோக்கா ரணவீர 24 ஓட்டங்களிற்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

*ஸ்கோர் சுருக்கம்:

வட மத்திய மாகாணம்: :117/4 (20) – அமா காஞ்சனா 64*, டிலானி மனோகரா 42

மத்திய மாகாணம்:  110/7(20) – பிரசாதினி வீரக்கொடி 30, யசோதா மெண்டிஸ் 22, இனோக்கா ரணவீர 24/2

போட்டி முடிவு – வட மத்திய மாகாண மகளிர் அணி 7 ஓட்டங்களால் வெற்றி