2023 மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் அபுதாபியில்

282

2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கு அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஐசிசி இன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மகளிர் T20 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின், தகுதிகாண் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 8 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறுகின்ற இந்த தகுதிகாண் தொடரில் இருந்து, 2023 ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்காக இரண்டு அணிகள் தெரிவு செய்யப்படவிருக்கின்றன.

அதன்படி செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள சயீட் கிரிக்கெட் மைதானம் மற்றும் டொலரன்ஸ் ஓவல் மைதானம் ஆகிய 2 மைதானங்களில் தகுதிகாண் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ‘A’ குழுவில் பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேபோன்று ‘B’ குழுவில் தாய்லாந்து, ஜிம்பாப்வே, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் இரண்டு அணிகள், 2023 மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

அதேபோன்று, குழு நிலைப் போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் 18,19,21 ஆகிய திகதிகளிலும், அரை இறுதிப் போட்டி செப்டம்பர் 25 ஆம் திகதியும், 3 முதல் 7 வரையான இடங்களை தீர்மானிக்கின்ற பிளேட் போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பன செப்டம்பர் 25 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மகளிர் T20 உலகக் கிண்ணத்தை நடத்தும் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மகளிர் T20 அணிகளின் தரவரிசையின் அடிப்படையில் 2023 மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<