அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.

இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல் வீரர் ரங்கன ஹேரத்துக்கும் கிரிக்கெட் உலகில் பிரபலமானவர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர் ஆகியோரிடமிருந்து சமூக வலைதளமான  டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார இலங்கை அணியின் வெற்றிக்கு தலைமை தாங்கிய தினேஷ் சந்திமாலையும், ஹேரத்தையும் முதலில் வாழ்த்தியிருந்தார்.

இன்னும் ரங்கன ஹேரத் பற்றி குமார் சங்கக்கார வல்லுனரான ஹேரத்தின் உன்னதமான அடைவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். அவரிடம் இன்னும் குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது விளையாடக்கூடிய ஆற்றல் உண்டுஎனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது உள்ளூர் T-20 அணிகளின் பயிற்றுவிப்பாளராக வலம்வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, தன்னோடு சக அணி வீரராக செயற்பட்ட ரங்கன ஹேரத்தை வாழ்த்தியுள்ளதோடு இலங்கை அணியின் ஒருங்கிணைந்த முயற்சிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் பொறுப்பினை அண்மையில் இராஜினாமா செய்த அஞ்செலோ மெதிவ்ஸ், காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியிருந்தார். எனினும், முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி பற்றி டுவிட்டர் மூலம் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், இப்படியான வெற்றி ஒன்றுடன் 400ஆவது விக்கெட்டையும் ரங்கன ஹேரத் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியான விடயம் எனக் குறிப்பிட்டு சந்திமாலையும் இலங்கை அணியினையும் பாராட்டியிருந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், தற்போதைய கிரிக்கெட் வரர்ணனையாளருமான ரஸ்ஸல் ஆர்னல்ட் இலங்கை அணிக்கும், ஹேரத்துக்கும் வாழ்த்துக்களை வழங்கியிருந்தார்.

அதோடு, பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளரான இலங்கையை சேர்ந்த சந்திக்க கதுருசிங்கவும் முதற்தடவையாக 400 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதலாவது இடது கை சுழல் வீரராக மாறியமைக்காக ரங்கன ஹேரத்தை பாராட்டியிருந்தார்.

இலங்கை அணிக்கு பாகிஸ்தான் வீரர்களின் மூலமும் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டிருந்தன. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் உயிர்ப்புடன் காணப்படுகின்றது. சிறந்த அணி வெற்றியினை சுவைத்துள்ளது. இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள். பாகிஸ்தான் அணி தொடரை சமநிலைப்படுத்த எதிர்பார்க்கின்றேன். “ என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரரான சஹீத் அப்ரிடியும் தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

மிகவும் சிறந்ததொரு டெஸ்ட் போட்டி, போட்டியின் திருப்புமுனை ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரங்கன ஹேரத்தினை வாழ்த்துகின்றேன். எமது இளம் அணி மீண்டும் போராட வேண்டும். யாசிர் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பிசொப், இலங்கை அணிக்கு இது சிறந்ததொரு வெற்றி. இவ்வெற்றி இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதற்கான சான்றாக அமைகின்றது. பாகிஸ்தான் அணிக்கு அடுத்த போட்டியில் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு சிறந்த டெஸ்ட் தொடர் எனக் கூறியிருந்தார்

இன்னும், இந்தியாவின் தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவரான ஹர்ஷா போக்லலேயும் ஹேரத்தை பாராட்டி, இலங்கை அணியானது இனி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் எனின் ஹேரத்தை இளமையாக வைத்திருக்க கூடிய விசித்திர மருந்து ஒன்றினை கண்டு பிடிக்க வேண்டும் என நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருந்தார்.


மேலும், இவற்றோடு நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கை அணியினை பாராட்டியிருந்தார். வீரர்களின் முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி தருகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க