நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரருக்காக வழங்கப்படுகின்ற சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை 3ஆவது முறையாகவும் வென்ற முதல் வீரராக கேன் வில்லியம்சன் புதிய சாதனை படைத்தார்.
டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அவர், இந்த தலைமுறையின் தலைசிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்த நிலையில், இவரது தலைமையில் மேற்கிந்தியதீவுகள், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
இரட்டை சதத்தின் மூலம் கோஹ்லியை நெருங்கியுள்ள வில்லியம்சன்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ……
இந்த நிலையில், வருடந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. இதன்படி, இவ்வருடத்துக்கான நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள் நேற்று (21) ஒக்லாந்தில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் வைபவம் ஆரம்பமாவதற்கு முன் கிரைஸ்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களுக்கான விசேட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் வருடத்தின் சிறந்த வீரருக்காக வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை கேன் வில்லியம்சன் தட்டிச் சென்றார். இதற்கு முன் ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் மூன்று தடவைகள் சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்ற முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார். முன்னதாக ரொஸ் டெய்லர் இந்த விருதை இரண்டு தடவைகள் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வருடத்தின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் நேர்த்தியான துடுப்பாட்டத்துக்குரிய ரெட்பாத் விருது ஆகியவற்றையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த பருவகாலத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 801 ஓட்டங்களையும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 838 ஓட்டங்களையும், 15 டி-20 கிரிக்கெட்டில் விளையாடி 332 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.
இதேவேளை, ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை ரொஸ் டெய்லர் பெற்றார். கடந்த பருவகாலத்தில் ஒருநாள் போட்டிகளில் 759 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொண்டதுடன், ஒருநாள் அரங்கில் 20 சதங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, வருடத்தின் உள்ளூர் போட்டிகளுக்கான சிறந்த வீரராக, வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தெரிவாக, வருடத்தின் சிறந்த டி-20 வீரருக்கான விருதை கொலின் முன்ரோவும் தட்டிச் சென்றனர்.
அத்துடன், மகளிர் பிரிவில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனையாக அமிலியா கெர்க் தெரிவானார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<