புதிய வீரர்கள் வரிசையில் வனிந்து ஹஸரங்க முன்னேற்றம்

443

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மூவகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான புதிய வீரர்கள் தரவரிசையினை வெளியிட்டிருக்கின்றது. 

அதன்படி, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் முதல் இடத்தினைப் பெற்றிருக்கின்றார். 

UAE மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்ட ICC T20I உலகக் கிண்ணம்

கடந்த வாரம் நிறைவுக்கு வந்த ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றியாளராக மாற அரைச்சதம் ஒன்றினை விளாசி காரணமாக இருந்த கேன் வில்லியம்சன், டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளி 901 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார். 

மறுமுனையில், இரண்டாம் இடத்திலுள்ள ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் காணப்பட, அவுஸ்திரேலிய அணியின் ஏனைய துடுப்பாட்டவீரரான மார்னஸ் லபச்சேனே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார்.

இதேநேரம், நியூசிலாந்து ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்த முக்கிய வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜேமிசன், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றார். இதேவேளை, டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்தும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. 

ரூட்டின் அரைச்சதத்துடன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

புதிதாக வெளியிடப்பட்டுள்ள T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் போது அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறைவீரர் வனிந்து ஹஸரங்க முன்னேற்றம் காட்டியிருக்கின்றார். அதன்படி, ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கும் வனிந்து ஹஸரங்க தற்போது T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 5ஆம் இடத்தில் காணப்படுகின்றார். வனிந்து ஹஸரங்கவோடு இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20I தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய துஷ்மன்த சமீரவும் 41 இடங்கள் முன்னேறி தற்போது 43ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்க அணி வீரரான தப்ரைஸ் சம்ஷி முதலிடத்தில் இருக்கின்றார்.  

இவர்கள் தவிர ஒருநாள் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்திலும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் முதலிடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…