அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் தான் விளையாடும் இறுதி கிரிக்கெட் தொடர் IPL ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கிளேன் மெக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைவராக செயற்படவுள்ளார். இவரின் தலைமையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
>> தென்னாப்பிரிக்கா ஒருநாள், T20I அணிக்கு புதிய தலைவர்
இந்தநிலையில் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கிளேன் மெக்ஸ்வெல் தன்னால் நடக்க முடியாது என்ற சூழ்நிலையில் மாத்திரமே IPL விளையாடுவதை நிறுத்துவேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட கிளேன் மெக்ஸ்வெல், “நான் விளையாடும் கடைசி தொடராக IPL இருக்கும். என்னால் நடக்க முடியாது என்ற கட்டம் வரை IPL தொடரில் விளையாடுவேன். எனது வாழ்க்கை முழுவதும் IPL எனக்கு எவ்வளவு நன்றாக இருந்தது என்பதைப் பற்றி நான் கூறியிருக்கிறேன். நான் சந்தித்த நபர்கள், பயிற்சியாளர்கள், சர்வதேச வீரர்கள் என்பவை எனது கிரிக்கெட்டை மெழுகேற்றியுள்ளது.
அதுமாத்திரமின்றி விராட் கோஹ்லி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் இரண்டு மாதம் விளையாடுவதும், ஏனைய போட்டிகளை அவர்களுடன் இணைந்து பார்ப்பதும் மிகச்சிறந்த அனுபவமாகும்” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<