டோனியின் அடுத்த கட்டம் என்ன? கிரிக்கெட் ஆடுவாரா? இல்லையா?

IPL 2023

154

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான மகேந்திரசிங் டோனி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விகள் அதிகமாக எழுந்து வருகின்றன.

டோனி (41 வயது) இந்திய அணிக்கு தலைமை தாங்கியதுடன் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

நிதிஷ் ராணவுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்!

அதனைத்தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மாத்திரம் விளையாடிவந்த இவர் கடந்த ஆண்டு சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனினும் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் மோசமான பிரகாசிப்பு காரணமாக ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்த தலைமைத்துவத்தை மீண்டும் டோனி பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு இவர் ஓய்வுபெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும், சென்னையில் தன்னுடைய கடைசிப் போட்டியில் விளையாடுவேன் என்ற அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியுடன் இந்த ஆண்டுக்கான சென்னை சுபர் கிங்ஸ் அணியின் லீக் போட்டிகள் அனைத்து சேப்பாக்கம் மைதானத்தில் நிறைவுபெற்றுள்ளன.

எனினும், சென்னை சுபர் கிங்ஸ் அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றால் சென்னையில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறான நிலையில், சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான காசி விஸ்வநாதன், டோனி அடுத்த ஆண்டு IPL தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், இது என்னுடைய யூகம். டோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? இல்லையா? என்பதை எமக்கு அறிவிக்கவில்லை. ஆனால் அவர் விளையாடிய மற்றும் அணியை வழிநடத்திய விதத்தை பார்க்கும்போது, அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என தனிப்பட்ட ரீதியில் நான் கருதுகிறேன் என்றார்.

காசி விஸ்வநாதன் இவ்வாறு அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான மொஹமட் கைப், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கடைசி IPL இதுவென்பதற்கு போதுமான குறிப்புகளை டோனி கொடுத்துள்ளார். அனைவரையும் தேடலில் விடுவது டோனியின் இயல்பான குணம். என்னுடைய கணிப்பின்படி டோனி அடுத்த ஆண்டு IPL தொடரில் விளையாடமாட்டார் என்றார்.

மகேந்திரசிங் டோனி சென்னை அணிக்காக விளையாடி வரும் போதும், அவருடைய முழங்கால் பகுதியில் கடுமையான உபாதை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனை பல சந்தர்ப்பங்களில் டோனி வெளிப்படுத்தியுள்ளார். எனவே எதிர்கால திட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அதனையும் அவர் அறிவிக்கவில்லை

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் ஆரம்பம் முதல் அணிக்கு தலைமை தாங்கிவரும் மகேந்திரசிங் டோனி, 4 தடவைகள் கிண்ணத்தை வென்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<