இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து 24 வயது துடுப்பாட்ட வீரரான வியான் மல்டர் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று தீர்வு?<<
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் முதல் துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது இலங்கை வீரரான லஹிரு குமார வீசிய பந்து வியான் மல்டரின் முன்கைப் பகுதியினை தாக்கியிருந்தது.
இதனையடுத்து இரண்டு பந்துகளினை முகம் கொடுத்த பின்னர் வலியின் காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேறிய மல்டர், தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸில் இறுதி வீரராக வந்து துடுப்பாடியிருந்தார். எனினும் முதல்நாள் மதிய போசணத்தினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட X-Ray பரிசோதனை முடிவுகள் அவரினை இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது.
அதேநேரம் வியான் மல்டர் முதல் டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரின் பிரதியீட்டு வீரராக மெதிவ் பிரீட்ஸ்கே தென்னாபிரிக்க குழாத்தில் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<