மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 1 ஓட்டத்தால் வெற்றி

289
WI v Ind 1st T20

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜான்சன் சார்லஸ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொகமது சமி முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் 2-வது பந்தை சார்லஸ் சிக்சருக்கு தூக்கி அதிரடி வேட்டையைத் தொடக்கி வைத்தார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்டங்கள் சேர்த்தது.

அஸ்வின் வீசிய 6-வது ஓவரில் சார்லஸ் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைச்சதம் அடித்தார்.

மொகமது ஷமி வீசிய 10-வது ஓவரில் சார்லஸ் ஆட்டம் இழந்தார். அவர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 79 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து ரஸல் களம் இறங்கினார். 10-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த லெவிஸ் அரைச்சதம் அடித்தார்.

11-வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரில் லெவிஸ் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரே ஓவரில் 32 ஓட்டங்கள் கிடைத்தது. அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓவர்கள் முடிவில் 164 ஓட்டங்களைக் குவித்தது.

அதன்பின் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட வேகம் சற்று சரிந்தது. இருந்தாலும் சராசரியாக ஒரு ஓவருக்கு தலா ஒரு சிக்ஸ் விளாசிக் கொண்டே இருந்தனர்.

ஜடேஜா வீசிய 16-வது ஓவர் இந்தியாவிற்கு திருப்பு முனையாக இருந்தது. 100 ஓட்டங்களுடன் லெவிஸ் அஸ்வினிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் இந்த ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 246 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் 5 ஓவர்களில் ரகானே 7 ஓட்டங்களுடனும், விராட் கோலி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் 4.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 48 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது. 

இதனையடுத்து, ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். ரோகித் சிக்ஸர்களாக விளாச, ராகுல் அற்புதமான பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 

இந்திய அணி 8.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் 28 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து தனது விக்கட்டைப் பறிகொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல், 46 பந்துகளில் சதம் அடித்தார்.

இதனால் 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் எடுத்தது. இறுதியாக கடைசி ஒவரில் 8 ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். 

முதல் பந்திலேயே தோனி கொடுத்த கேட்சை சாமுவேல் தவறவிட்டார். இருப்பினும் அந்த பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ராகுல் ஒரு ஓட்டம் எடுத்தார். மூன்றாவது பந்தை தோனி சந்தித்தார். லெக் பை மூலம் ஒரு ஓட்டம் கிடைத்தது. இதனால் கடைசி மூன்று பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. 

4-வது பந்தை சந்தித்த ராகுல் ஒரு ஓட்டம் எடுக்க, 5-வது பந்தில் தோனி 2 ஓட்டங்கள் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் மிகவும் பரபரப்பான கட்டத்தில் கடைசி பந்தை பிராவோ வீச, தோனி சாமுவேல்ஸ் இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி, நூலிழையில் தோல்வி அடைந்தது. பிராவோவின் அற்புதமான பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றியை ருசித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் பிராவோ மட்டும் அற்புதமாக பந்து வீசி 4 ஓவர்களில் 37 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

கே.எல்.ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 51 பந்துகளில் 110 ஓட்டங்கள் எடுத்தார். தோனி, 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சதம் அடித்த லெவிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 245/6 (20)

ஏவின் லுவிஸ் 100, ஜோன்சன் சார்ள்ஸ் 79, எண்டர் ரசல் 22 – ரவீந்திர ஜடேஜா 39/2, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 47/2

இந்தியா – 244/4 (20)

லோகேஷ் ராஹுல் 110*, ரோஹித் சர்மா 62, டோனி 43 – டுவயின் பிராவோ 37/2

மேற்கிந்திய தீவுகள் அணி 1 ஓட்டத்தால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்