ஏன் முக்கிய வீரர்கள் 23 வயதின் கீழ் இலங்கை குழாமிலிருந்து நீக்கப்படனர்?

717

2020 ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சில வீரர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கேள்விகள் எழுப்பப்படும் அந்த வீரர்கள் நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க.), திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க.), மொஹமட் ஆகிப் (கொழும்பு கா.க.), இஷான் தனூஷ (பொலிஸ் வி.க.) மற்றும் மஹேந்திரன் தினேஷ் (பொலிஸ் வி.க.) ஆகியோராவர். இவர்கள் அனைவரும் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்காக விளையாடியவர்கள் என்பதோடு 2018 பருவகாலத்தில் தத்தமது கழகங்களுக்கு சிறப்பாக திறமையை வெளிக்காட்டினர்.

AFC சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நாடெங்கும் தேர்வு செயற்பாடுகள் இடம்பெற்ற பின்னர் தேர்வுசெய்யப்பட்ட வீரர்கள் ஆரம்பக்கட்ட பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேல் குறிப்பிட்ட வீரர்களும் அழைக்கப்பட்டனர். எனினும் 2018 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றிருந்ததால் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் அந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் மூலம் தெரியவருகிறது. எனினும், அவர்கள் வீரர்களின் இறுதிக் குழாமில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.     

சம்பியன்ஸ் லீக் முடிந்த விரைவில் இந்த வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க வரும்படி அழைக்கப்பட்டிருந்தனர்.

நீக்கப்பட்டதற்கான காரணம்

நவீட் ஜூட்

பருவகாலத்தின் முடிவின்போது தனது கோல் ஆற்றலை பெற்றுக்கொண்டார். ஆனால் நாட்டை விடவும் தனது கழகத்தை தேர்வு செய்த அவர் 2019 CEM தங்கக் கிண்ணத்தில் பங்கேற்க ஜாவா லேன் அணியுடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

திலிப் பீரிஸ்

ரினௌன் அணிக்காக ஒரு பொன்னான முதல் பருவகாலத்தை பதிவு செய்த திலிப் அந்த அணிக்காக பல கோல்களை பெற்றதோடு கோல் உதவிகளையும் செய்தார். எனினும், உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல தீர்மானித்த அவர் குழாமில் இருந்து வெளியேறினார்.

இஷான் தனூஷ மற்றும் மஹேந்திரன் தினேஷ்

செல்லமாக ‘பெஞ்சா’ என்று அழைக்கப்படும் இஷான் தனூஷ மற்றும் மஹேந்திரன் தினேஷ் இருவரும் பொலிஸ் வி.க. அணியில் இடம்பெற்று 2018 பருவத்தில் சிறப்பாக திறமையை வெளிக்காட்டினர். அந்த அணி FA கிண்ண அரையிறுதி வரை முன்னேறியதுடன், 2018 ப்ரீமியர் லீக் டிவிஷன் I இல் தோல்வியுறாத அணியாக சம்பியனானது.

இந்த இருவரும் 23 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றபோதும், அவர்கள் தமது பொலிஸ் உத்தியோகத்தர் பயிற்சியை ஆரம்பித்தது மற்றும் இலங்கை அணி பயிற்சிக்கு விடுவிக்கப்படாததால் குழாமில் இருந்து நீக்கப்பட்டனர்.

மொஹமட் ஆகிப்  

கடந்த மார்ச் 13 ஆம் திகதி முடிவுற்ற கொழும்பு கால்பந்து கழகத்தின் நீண்ட மற்றும் விறுவிறுப்பான 2018 பருவகாலத்திற்கான கால்பந்து ஆட்டங்களில் ஆகிப் முக்கிய வீரராகப் பங்கேற்றார். இது இலங்கை குழாம் பஹ்ரைன் அணிக்கு எதிராக தனது தகுதிகாண் போட்டியில் பங்கேற்கச் செல்வதற்கு வெறும் 6 நாட்களே இடைவெளி கொண்ட காலமாகும்.

SAFF அரையிறுதியில் இலங்கை மகளிர் தோல்வி

வெறும் 18 வயதான ஆகிப் இந்த கடினமான பருவகாலத்தை சந்தித்ததால் குழாமில் இடம்பெறுவதில் உடல் மற்றும் உள ரீதியில் மிகத் தளர்வுற்று இருப்பதாகவும் எதிர்கால தொடர்களுக்காக தயாராவதற்கு ஓய்வு தேவை என்றும் முகாமை கருதுவதாக அறிக்கைகள் கூறப்பட்டன.  

முழு குழாத்துடனும் குறைந்த காலம் அவர் பயிற்சியில் ஈடுபட்டது மற்றும் ஆட்ட பாணி மற்றும் திட்டங்களுக்கு தம்மை சரிப்படுத்திக் கொள்வது போன்ற விடயங்களும் அவரது நீக்கத்திற்கு சிலவேளை காரணமாக இருக்கலாம்.

இறுதியாக,

மேற்குறிப்பிட்ட வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் கழக மட்டத்தில் அவர்களின் தற்போதைய ஆட்டத் திறமை காரணமாக அவர்கள் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட குழாத்தில் சேர்க்கப்படுவது சிறப்பானதாக இருந்தது. எவ்வாறாயினும் நிலைமையை பார்க்கும்போது தலைமை பயிற்சியாளர் நிஸாம் பக்கீர் அலிக்கு மாற்று வழியை தேர்ந்தெடுக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டதோடு இருக்கின்ற வளத்தைக் கொண்டு முடியுமான சிறந்த குழாம் ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டது.    

இந்த ஐந்து வீரர்களும் எதிர்காலத்தில் இலங்கை குழாத்தில் இடம்பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவரை இலங்கை அணியை வாழ்த்தி அவர்களை உற்சாகப்படுத்துவது இலங்கை கால்பந்து ரசிகர்களாகிய எமது பொறுப்பு அல்லவா?

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட குழாத்தில் மேல் குறிப்பிடப்பட்ட ஐந்து வீரர்களும் நீக்கப்பட்டது மற்றும் அந்தக் குழாத்தில் இடம்பெறாத தகுதியான வீரர்கள் பற்றி உங்களது கருத்தை கீழே குறிப்பிடுங்கள்….

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<