நியூஸிலாந்து வீரர்கள் இடதுகை சுழல் பந்துவீச்சுக்கு மோசமாக விளையாடுகின்ற காரணத்தினால் தான் தனக்கு 2014 டி20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவித்தார்.
மெதிவ்ஸின் உடற்தகுதி மாற்றத்துக்கான காரணம் என்ன?
ThePapare.com இணையத்தளம் ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருடன் பேஸ்புக் நேரலை (Live) மூலம் பிரத்தியேக நேர்காணல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தது.
இந்த நேர்காணலில் ரங்கன ஹேரத்திடம், 2014 டி20 உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் விளையாட எவ்வாறு இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்றீர்கள் என கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஹேரத் பதிலளிக்கையில்,
“2014 டி20 உலகக் கிண்ணத்தில் நான் விளையாடி முதல் போட்டியாக நியூஸிலந்து அணியுடனான அரையிறுதிப் போட்டி அமைந்தது.
குறிப்பாக நியூஸிலாந்து அணியுடன் விளையாடும் போது எவ்வாறான பந்துகளை வீசினால் அதன் துடுப்பாட்ட வீரர்களை வெளியேற்ற முடியும் என்ற விடயத்தினை நாங்கள் நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
அவர்களது கடந்தகால போட்டிகளை எடுத்துப் பார்த்த போது இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மோசமாக விளையாடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. நியூஸிலாந்து அணி வீரர்களது மிகப் பெரிய குறைபாடாக அது இருந்து வந்தது.
அதன் காரணமாகத் தான் எனக்கு நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது” எனத் தெரிவித்தார்.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது இன்னிங்ஸ் நிறைவில் சவால் குறைந்த 119 ஓட்டங்களைத்தான் பெற்றது. எனவே, போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்திக்கும் என பலரும் நம்பினர். எனினும், நடந்தது வேறு. இது குறித்து கருத்து தெரிவித்த ஹேரத்,
“நாங்கள் அதிக ஓட்டங்களைக் குவித்தாலோ அல்லது குறைந்தளவு ஓட்டங்களைக் குவித்தாலோ எம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது.
கிரிக்கெட்டின் சாதனை பொக்கிஷம் குமார் சங்கக்கார
குறிப்பாக, எமது துடுப்பாட்ட வீரர்களும், பந்துவீச்சாளர்களும் அப்போது திறமையின் உச்சத்தில் இருந்தார்கள். அதில் எமது பந்துவீசசாளர்கள் குறித்து மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது.
அதுமாத்திரமின்றி, போட்டிக்கு முன்னர் நாங்கள் நடத்திய கலந்துரையாடலின் போது நியூஸிலாந்து வீரர்களை மிக விரைவில் வீழ்த்த வேண்டுமானால், முதல் 6 ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என தீர்மானித்தோம்.
அவர்களது கடந்தகால பதிவுகளைப் பார்த்த போது இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் அதிகம் தடுமாறுவதை அவதானிக்க முடிந்தது. எனவே POWEPLAY ஓவரில் எனக்கு தான் பந்துவீசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அந்த அனைத்து கௌரவமும் பயிற்சியாளர்களுக்கும், அணியின் தலைவர் மற்றும் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களுக்கு சென்றடைய வேண்டும். உண்மையில் 2014 டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் வரை நாங்கள் சிறப்பு திட்டத்துடன் தான் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கியிருந்தோம்.
மேலும், நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் என்னால் 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடிந்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு 2014இல் தான் மற்றுமொரு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டோம்.
எனவே 2014 டி20 உலகக் கிண்ணத்தை வெல்வதில் இலங்கை அணியின் ஒரு அங்கத்தவராக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதை நான் எப்போதும் ஒரு சாதனையாக கருதுகிறேன்” என தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<